IND vs AUS : ஆஸ்திரேலியாவை முடிக்க என்கிட்ட பந்தை கொடுங்கன்னு அந்த 2 பேரும் அடம் பிடிச்சாங்க – ரோஹித் கலகலப்பான கருத்து

Rohit Press
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சுழலுக்கு சாதகமாக இருந்த அதே மைதானத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 400 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 120 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக அறிமுக போட்டியில் அசத்திய டோட் முர்பி 7 விக்கெட்டுகளை சாய்ந்தார். அதைத்தொடர்ந்து 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை விட மோசமாக பேட்டிங் செய்து வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 25* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

போட்டி போட்டாங்க:
அதனால் 3வது நாளிலேயே உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்து ஆஸ்திரேலியர்கள் முன்வைத்த பிட்ச் பற்றிய குற்றச்சாட்டுகளை பொய்யாக்கியது. இந்த போட்டியில் 70 ரன்கள் 7 விக்கெட்களை எடுத்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாகவும் 23 ரன்கள் 8 விக்கெட்டுகள் எடுத்த அஷ்வின் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாகவும் ஜொலித்தார்கள் என்றே சொல்லலாம்.

கடந்த 10 வருடங்களாகவே இந்திய மண்ணில் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக எதிரணியை தங்களது மாயாஜால சுழலால் சாய்த்து வரும் இந்த ஜோடி இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை சாய்த்து சாதனைகளை படைப்பதற்காக தங்களுக்கு பந்து வீசு வாய்ப்பு கொடுக்குமாறு மாறி மாறி கேட்டதாக போட்டியின் முடிவில் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவின் 3 ஸ்பின்னர்களையும் நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருந்தது. மேலும் அவர்கள் எப்போதும் ஏதோ ஒரு சாதனைகளை நோக்கி பயணிக்கிறார்கள். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா தாம் இன்னும் ஒரு விக்கெட் எடுத்து 250 விக்கெட்டுகளை தொட வேண்டும் என்பதால் தமக்கு பந்து வீச வாய்ப்பு கொடுக்குமாறு என்று என்னிடம் கேட்டார். மறுபுறம் 4 விக்கெட்டுகளை எடுத்து விட்ட அஷ்வின் 5வது விக்கெட்டை எடுப்பதற்காக தமக்கு பந்து வீச வாய்ப்பு கொடுக்குமாறு என்னிடம் கேட்டார். அந்த வகையில் இது தான் தற்சமயத்தில் நான் அவர்களிடம் சந்திக்கும் சவாலாகும்”

“பொதுவாக இது போன்ற சாதனைகளைப் பற்றி நான் சிந்திப்பது கிடையாது. ஆனால் இந்த வீரர்கள் அவருடைய சாதனைகளை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதே சமயம் அவர்களிடம் தரமும் உள்ளது. எனவே அவர்களுக்கான சரியான இடத்தை ஒதுக்கி கொடுப்பது மட்டுமே எனக்கு கடினமான வேலையாக இருக்கிறது. மேலும் அஷ்வின் எப்போதும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பவர். அக்சர் மற்றும் ஜடேஜா ஆகியோர் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பவர்கள். எனவே அதற்கேற்றார் போல் அவர்களுக்கு நான் வாய்ப்பு கொடுக்கிறேன்”

இதையும் படிங்க: வீடியோ : யோவ் கேமராமேன் என் மேல என்ன ஆடுது – நேரலையில் கேமராமேனை கலாய்த்த ரோஹித் சர்மா, காரணம் இதோ

“ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்டார்க், ஹேசல்வுட், கமின்ஸ் உள்ளது போல் இந்திய அணியில் அக்சர், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தொடர்ந்து இது போன்ற பிட்ச்களில் பல வருடங்கள் விளையாடி இந்தளவுக்கு வளர்ந்துள்ளது நமக்கு ஆசீர்வதிக்கப்பட்டதாகும். அவர்கள் எப்போதும் நம்மை ஏமாற்ற மாட்டார்கள். இங்கே சுழலுக்கு சாதகமான சூழ்நிலைகள் இருக்கிறது உண்மை தான். ஆனால் அதை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம். ஏனெனில் இந்த பிட்ச் 2 அணிகளுக்கும் பொதுவானது. அவர்களுக்கு எந்த இடத்தில் எப்படி பந்து வீசி எதிரணிக்கு அழுத்தத்தை கொடுத்துக் கொண்டே இருக்க முடியும் என்பது நன்றாக தெரிந்துள்ளது” என்று இந்திய ஸ்பின்னர்களை மனதார பாராட்டினார்.

Advertisement