யோவ் கேமராமேன் என் மேல என்ன ஆடுது – நேரலையில் கேமராமேனை கலாய்த்த ரோஹித் சர்மா, காரணம் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற அந்த போட்டியில் சுழலுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சில் வெறும் 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அதே சுழலுக்கு சாதகமான மைதானத்தில் நல்ல லைன், லென்த் போன்ற வேரியசன்களை பின்பற்றாமல் பந்து வீசிய ஆஸ்திரேலியாவை அபாரமாக எதிர்கொண்டு 400 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் அசத்திய டோட் முர்பி 7 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் இந்தியாவின் தெறிக்க விடும் பந்து வீச்சில் வெறும் 91 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

கலாய்த்த ரோஹித்:
அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதனால் அபார வெற்றி பெற்ற இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் ஆஸ்திரேலியாவை வெறும் 3 நாட்களில் சுருட்டி தங்களை சொந்த மண்ணில் கில்லி என்பதை நிரூபித்தது. அத்துடன் ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி குறை சொல்லி வாயில் மட்டும் பேசிய ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை செயலில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா பொய்யாக்கியது.

முன்னதாக இப்போட்டியில் 3வது நாள் உணவு இடைவெளியில் 2வது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியாவை தேநீர் இடைவெளிக்கு முன் சுருட்டும் அளவுக்கு அஷ்வின் உள்ளிட்ட இந்திய ஸ்பின்னர்கள் அனலாக பந்து வீசினார் என்றே சொல்லலாம். அப்போது நிறைய தருணங்களில் எல்பிடபிள்யூ முறையில் இரு அணிகளும் நடுவரிடம் அடிக்கடி தீர்ப்பை எதிர்த்து முறையிட்டார்கள். அந்த வகையில் ஒரு தருணத்தில் பீட்டர் ஹெண்ட்ஸ்கோம்பை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்த அஷ்வின் அவுட் கேட்டார். ஆனால் அதை நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததால் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டிஆர்எஸ் ரிவியூ எடுத்தார்.

- Advertisement -

அந்த பரபரப்பான தருணத்தில் தாங்கள் எடுத்த முடிவு சரிதானா என்பதை தெரிந்து கொள்வதற்காக மைதானத்தில் இருக்கும் பெரிய திரையை நோக்கி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் பார்த்து முடிவுக்காக காத்திருந்தனர். ஆனால் அப்போது 3வது அம்பயர் அதை எப்படி சோதிக்கிறார் என்று காட்ட வேண்டிய கேமராமேன் அடங்கிய ஒளிபரப்பு குழுவினர் அதை விட்டுவிட்டு ரோகித் சர்மா எந்த மாதிரியான ரியாக்சன் கொடுக்கிறார் என்பதை தீவிரமாக போக்கஸ் செய்து பெரிய திரையில் ஒளிபரப்பினர்.

இருப்பினும் முடிவு வரும் என்பதற்காக காத்திருந்த ரோகித் சர்மா பெரிய திரையில் மீண்டும் தமது முகத்தையே பார்த்ததால் கடுப்பாகி “யோவ் என்னை ஏன் காட்டுகிறீர்கள். அதற்கு பதிலாக ரிவ்யூவை காட்டுங்கள்” என்று தமக்கே உரித்தான பாணியில் ஹிந்தியில் கேமராமேனை கலாய்த்தார். அதைத்தொடர்ந்து உடனடியாக அந்த ரிவ்யூவை கேமராமேன் ஒளிபரப்பு துவங்கினார். அப்போது சூரியகுமார் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின் உள்ளிட்ட இந்திய வீரர்கள் ரோகித் சர்மா கலாய்த்ததை கேட்டு புன்னகையை வெளிப்படுத்தினார்கள்.

இதையும் படிங்க: டாப் பார்ம்ல இருக்கும் அவங்க 2 பேரை ஒதுக்கிட்டு கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்தது தவறு – வெங்கடேஷ் பிரசாத் விளாசல்

பொதுவாகவே இது போன்ற தருணங்களில் கலகலப்பாக செயல்படுவதை வழக்கமாக வைத்துள்ள ரோகித் சர்மா இப்படி எதார்த்தமாக செயல்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறுதியில் அதை சோதித்த 3வது நடுவர் அவுட் என்று தெரிய தெரிந்ததால் களத்தில் இருந்த நடுவர் கொடுத்த முடிவை மாற்றி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement