49 வருட இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் கங்குலி, தோனி, கோலி போன்ற எந்த கேப்டனும் செய்யாத – தனித்துவ சாதனை படைத்த ரோஹித் சர்மா

Rohit Sharma Captain
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் 2023 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் முடிவில் குரூப் ஏ புள்ளி பட்டியலில் 3 புள்ளிகளை பெற்று 2வது இடம் பிடித்த இந்தியா சூப்பர் 4 சுற்று தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் 1 புள்ளியைப் பெற்ற இந்தியா நேற்று நடைபெற்ற நேபாளுக்கு எதிரான 2வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் முடிந்தளவுக்கு போராடி 48.5 ஓவரில் 230 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஆசிப் சேக் 58 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய இந்தியா களமிறங்கிய போது மழை வந்ததால் 23 ஓவரில் 145 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

தனித்துவ சாதனை:
அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 74* (59) ரன்களும் சுப்மன் கில் 67* (61) ரன்களும் எடுத்து 20.1 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் பேட்டிங்கில் சிறப்பாக போராடிய நேபாள் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்டதால் இத்தொடரின் 2 போட்டிகளிலும் 2 தோல்விகளை பதிவு செய்து லீக் சுற்றுடன் வெளியேறியது. மேலும் இப்போட்டியில் 74* ரன்கள் அடித்து வெற்றியை எளிதாக்கிய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக கடந்த 2022 ஜனவரி மாதம் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்களை எடுத்ததால் இங்கிலாந்தை வெறும் 110 ரன்களுக்கு சுருட்டிய இறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

அந்த நிலையில் இப்போட்டியிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு போட்டிகளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற தனித்துவமான சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். கடந்த 1974ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் இந்தியா இதற்கு முன் வேறு எந்த கேப்டன்கள் தலைமையிலும் 2 முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதில்லை.

இதையும் படிங்க: இப்டில்லாம் இருந்தா சூப்பர் 4 சுற்றில் ஜெயிக்க முடியுமா? வெற்றி பெற்றும் இந்திய வீரர்களை விளாசிய ரோஹித் – காரணம் என்ன

மேலும் இதற்கு முன் எம்எஸ் தோனி, சீனிவாசன் வெங்கட்ராகவன், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, கேஎல் ராகுல் ஆகியோரது தலைமையில் தலா 1 முறை மட்டுமே ஒருநாள் போட்டிகளில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த வகையில் வரலாற்றில் இதற்கு முன் எந்த கேப்டனும் செய்யாத சாதனையை படைத்துள்ள ரோஹித் சர்மா 2023 உலக கோப்பையை வெல்லும் முனைப்புடன் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement