
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான புதிய இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் கடைசிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியைத் தவிர்த்து ஆறுதல் வெற்றி பெற்றது. சிட்னியில் நடைபெற்ற அப்போட்டியில் 237 ரன்களை துரத்திய இந்தியா 38.3 ஓவரில் இலக்கைத் தொட்டு வெற்றி பெற்றது.
அந்த வெற்றிக்கு பேட்டிங்கில் விராட் கோலி 74*, ரோஹித் சர்மா 121* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினர். அதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன் தங்களை கழற்றி விட நினைக்கும் தேர்வுக்குழுவுக்கு அவர்கள் தக்க பதிலடியும் கொடுத்தனர். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது.
அதனால் 2027 உலகக் கோப்பையில் அவருடைய தலைமையில் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியாது என்று கருதும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அதற்காக மனம் தளராக ரோஹித் சர்மா தம்முடைய உடல் எடையை குறைத்து ஆஸ்திரேலியா தொடரில் 202 ரன்கள் அடித்து அசத்தினார்.
அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக (38) வயதில் சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். மேலும் திறமையும் அனுபவமும் நிறைந்த தமக்கு சாதிக்க வயது தடையில்லை என்பதை ரோஹித் சர்மா நிருபித்துள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விளையாடும் வரை யார் சொன்னாலும் ரோஹித் ஓய்வு பெற மாட்டார் என்று அவருடைய பயிற்சியாளர் தினேஷ் லேட் தெரிவித்துள்ளார்.
அது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது ஸ்பெஷலான தருணம். ஏனெனில் ரோஹித் சர்மா நன்றாக விளையாடாததால் கிரிக்கெட்டில் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்ற பேச்சுக்கள் காணப்பட்டது. அந்த சூழ்நிலையில் அவர் 73, 121* என 2 நல்ல இன்னிங்ஸ் விளையாடினார். அத்துடன் தம்மை நாட்டுக்காக இப்போதும் பங்காற்றக்கூடிய டாப் பிளேயர் என்பதையும் அவர் காண்பித்துள்ளார்”
இதையும் படிங்க: 89.2 ஓவரில் முடிந்த டெஸ்ட் மேட்ச்.. ஒரே இன்னிங்ஸ் 2 ஹாட்ரிக்.. 63 வருட சாதனையை உடைத்த ரஞ்சி போட்டி
“அவருடைய தன்னம்பிக்கை மட்டுமே இந்த வயதிலும் அசத்துவதன் பின்னணியில் இருக்கும் ரகசியமாகும். அதனாலேயே அவர் ஓய்வு பெறவில்லை. 2027 உலகக் கோப்பையில் விளையாட விரும்பும் அவர் அதன் பின்பு மட்டுமே ஓய்வு பெற விரும்புகிறார். அதற்காக ரோகித் சர்மா தயாராக துவங்கியுள்ளார்” என்று கூறினார்.