இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2025 – 26 சீசன் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் அக்டோபர் 25ஆம் தேதி அசாம் மாநிலத்தில் இருக்கும் டின்சுக்யா மைதானத்தில் எலைட் குரூப் சி பிரிவில் இருக்கும் அசாம் மற்றும் சர்வீசஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து விளையாடிய அசாமை வெறும் 17.2 ஓவரில் 103 ரன்களுக்கு சர்வீசஸ் சுருட்டி வீசியது. அதிகபட்சமாக பிரட்யுன் சைக்கியா 52, ரியன் பராக் 36 ரன்கள் அடித்தார்கள். சர்வீசஸ் அணிக்கு அர்ஜுன் சர்மா 5, ஃபுல்கிட் நரங் 2, மோகித் ஜங்ரா 3 விக்கட்டுகள் எடுத்து அசத்தினார்கள். குறிப்பாக 12வது ஓவரில் 3, 4, 5வது பந்துகளில் ரியன் பராக், சுமித் கடிகோங்கர், சிப்சங்கர் ராய் ஆகியோரை அர்ஜுன் சர்மா அடுத்தடுத்து அவுட்டாக்கினார்.
2 ஹாட்ரிக் விக்கெட்ஸ்:
அதே போல 15வது ஓவரின் கடைசி பந்தில் பிரட்யுன் சைக்கியா அவுட்டாக்கிய மோஹித் ஜங்ரா 16வது ஓவரின் முதல் 2 பந்துகளில் முக்தர் ஹசன், பேர்கப் லத்கார் ஆகியோரை அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார். அந்த வகையில் சர்வீசஸ் அணியின் 2 பவுலர்கள் ஹாட்ரிக் எடுத்தார்கள். ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் இப்படி ஒரே இன்னிங்ஸில் 2 ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அடுத்ததாக விளையாடிய சர்வீசஸ் முடிந்தளவு போராடியும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இர்பான் கான் 51*, சிவம் குமார் 16 ரன்கள் எடுத்து 5 ரன்களை முன்னிலை பெற்றுக் கொடுத்தனர். அசாமுக்கு அதிகபட்சமாக ரியான் பராக் 5, ராகுல் சிங் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய அசாமை தெறிக்க விட்ட சர்வீசஸ் வெறும் 75 ரன்களுக்கு சுருட்டி வீசியது.
அரிய போட்டி:
அதிகபட்சமாக சுமித் காடிகோங்கர் 25 ரன்கள் எடுத்த நிலையில் சர்வீசஸ்க்கு அதிகபட்சமாக அர்ஜுன் சர்மா 4, சுக்லா 3 எடுத்தனர். இறுதியில் 71 ரன்களை துரத்திய சர்வீசஸை சிவம் குமார் 16, ஜெயந் கோயட் 13, மோஹித் அல்வாட் 16*, ரவி சௌஹான் 20* அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.
இதையும் படிங்க: 33/5 டூ 223.. தனியாளாக போராடிய கேப்டன் ப்ரூக்.. நியூஸிலாந்து மண்ணில் வரலாறு காணாத சாதனை.. இங்கிலாந்து தோல்வி
மொத்தத்தில் அப்போட்டி வெறும் ஒன்றேகால் நாளில் 89.2 ஓவரில் 540 பந்துகளில் முடிந்தது. அதன் வாயிலாக ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் மிகவும் குறைந்த ஓவரில் வேகமாக முடிந்த போட்டி என்ற அரிய சாதனையை அசாம் – சர்வீசஸ் நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன் 63 வருடங்களுக்கு முன்பாக 1962 ரஞ்சிக் கோப்பையில் டெல்லி – ரயில்வேஸ் அணிகள் மோதிய போட்டி 547 பந்துகளில் முடிந்ததே முந்தைய சாதனை.



