
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்ற கையுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது. விரைவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாக கடைசியாக இந்தியா பங்கேற்கும் இந்த டி20 தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதியன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 106/8 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
பவுலிங்க்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் மிரட்டலாக பந்துவீசிய இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணிக்கு கேப்டன் பவுமா, டீ காக் உட்பட டாப் 5 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 9/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் மானத்தை காப்பாற்றிய மார்க்கம் 25 (24) ரன்களும் வென் பர்ணல் 24 (37) ரன்களும் இறுதியில் அதிரடி காட்டிய கேசவ் மகாராஜ் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 41 (35) ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அசத்திய ஸ்கை:
அதை தொடர்ந்து 107 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாக விராட் கோலி 3 (9) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். அதனால் 17/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று தடுமாறியபோது களமிறங்கிய சூரியகுமார் வழக்கம்போல மிரட்டலாக பேட்டிங் செய்து 5 பவுண்டரி 3 சிக்சருடன் 50* (33) ரன்கள் விளாசி 16.4 ஓவரில் 110/2 ரன்களை எடுக்க வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அவருடன் மறுபுறம் தடவிய கேஎல் ராகுல் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 51* (56) ரன்கள் குவித்து அசத்தினார்.
ரோஹித் சூப்பர் சாதனை:
இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலே தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. முன்னதாக விரைவில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்லும் லட்சிய பயணத்தில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்ட இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது.
இருப்பினும் யானைக்கும் அடி சறுக்கியதைப்போல் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவை சந்தித்த இந்தியா உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக போராடி வென்று வெற்றி பாதைக்கு திரும்பி தற்போது தென்னாப்பிரிக்காவையும் தோற்கடித்துள்ளது. மேலும் இந்த வருடம் ரிஷப் பண்ட், பாண்டியா ஆகியோரைத் தவிர்த்து ரோகித் சர்மா தலைமையில் மட்டும் இந்தியா 16 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற எம்எஸ் தோனியின் வரலாற்றுச் சாதனையை உடைத்த ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 16* (2022)
2. எம்எஸ் தோனி : 15 (2016)
இதுவரை 9 மாதங்களிலேயே இந்த சாதனையை படைத்து உலக அளவிலான பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் அவர் விரைவில் நடைபெறும் உலகக்கோப்பை உட்பட எஞ்சிய 3 மாதங்களில் இன்னும் 5 வெற்றிகளை பதிவு செய்யும் பட்சத்தில் உலக சாதனை படைக்கவும் பிரகாச வாய்ப்புள்ளது. அந்த பட்டியல்:
1. பாபர் அசாம் : 20 (2021)
2. சர்பராஸ் அஹமத் : 17 (2018)
3. ரோகித் சர்மா : 16* (2022)
4. எம்எஸ் தோனி : 15 (2016)
மோசமான சாதனைகள்:
1. ஆனால் இப்போட்டியில் டக் அவுட்டான அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 2 முறை டக் அவுட்டான முதல் இந்திய கேப்டன் என்ற பரிதாப சாதனையும் படைத்தார். கடந்த பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த டி20 தொடரிலும் அவர் போட்டியில் டக் அவுட்டானார்.
2. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையையும் அவர் சமன் செய்தார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா/விராட் கோலி : தலா 3
2. ஷிகர் தவான் : 1
இதையும் படிங்க : IND vs RSA : பிட்ச் இப்படி பண்ணும்னு நான் நெனைச்சிக்கூட பாக்கல – தோல்வி குறித்து பவுமா வருத்தம்
3. அதுபோக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியலில் தொடர்ந்து அவர் முதலிடத்தில் உள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 9*
2. விராட் கோலி : 5
4. கேஎல் ராகுல் : 4