விராட் கோலி இல்லாத கேப்பில் மெகா உலகசாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா! – என்ன தெரியுமா?

Rohith
- Advertisement -

இலங்கைக்கு அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று துவங்கியது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் நேற்று இரவு 7 மணிக்கு துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் சனாகா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

INDvsSL

- Advertisement -

இதை அடுத்து தனது பேட்டிங்கை துவங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷன் கிஷன் ஆகியோர் ஆரம்பம் முதலே இலங்கை பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடிக்கத் துவங்கினார்கள். இந்த 2 பேட்ஸ்மேன்களையும் ஆரம்பத்திலேயே அவுட் செய்ய முடியாமல் திணறிய இலங்கை பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினார்கள்.

200 ரன்கள் இலக்கு:
தொடர்ந்து பட்டையை கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் குவித்து இப்போட்டியில் ஆரம்பத்திலேயே இந்தியாவின் கையை ஓங்க செய்தனர். இதில் கேப்டன் ரோகித் சர்மா 32 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து இலங்கை பந்துவீச்சாளர்களை தெறிக்கவிட்ட இஷன் கிஷன் அரைசதம் அடித்து 56 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 மெகா சிக்ஸர்கள் உட்பட 89 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

ishan

இந்த ஓபனிங் ஜோடி கொடுத்த அபாரமான தொடக்கத்தை அப்படியே பயன்படுத்திய அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் கடைசி நேரத்தில் தன் பங்கிற்கு அதிரடியாக ரன்களை குவித்து வெறும் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட அரைசதம் கடந்து 57* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்படி டாப் 3 இந்திய வீரர்களின் அதிரடியான ரன் குவிப்பால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 199/3 ரன்களை எடுத்த இந்திய அணி இலங்கை வெற்றிபெற 200 என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது.

- Advertisement -

பரிதாப இலங்கை:
இதை தொடர்ந்து 200 என்ற இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் நிஷாங்காவை முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் செய்து புவனேஸ்வர் குமார் அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த மிஸாரா 13, லியனகே 11 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க பின்னர் பொறுப்புடன் விளையாட வேண்டிய தினேஷ் சந்திமால் 10 (9) கேப்டன் தசுன் ஷனகா 3 (6) போன்ற முக்கியமான வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினார்கள். இதனால் 60/5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இலங்கையின் தோல்வி உறுதியான நிலையில் கடைசி நேரத்தில் சரித் அசலங்கா அதிரடியாக பேட்டிங் செய்து 47 பந்துகளில் 53* ரன்கள் அடித்து தனது அணியின் வெற்றிக்காக போராடினார்.

இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியால் 137/6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்து அசத்தியுள்ளது.

- Advertisement -

மெகா உலகசாதனை:
புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா வழக்கம்போல இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதைவிட இப்போட்டியில் பேட்டிங்கில் 44 ரன்களை அடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற நியூசிலாந்தின் மார்டின் கப்தில் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Rohith-1

இந்த போட்டித் துவங்குவதற்கு முன்பாக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் மார்ட்டின் கப்டில் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பின் 3வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா இந்த போட்டியில் 44 ரன்கள் விளாசியதன் காரணமாக அந்த இருவரையும் முந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இலங்கைக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஓய்வு எடுக்கும் இந்தியாவின் நட்சத்திர விராட் கோலி நேற்றைய போட்டிக்கு முன்பு வரை அந்தப் பட்டியலில் 2வது இடத்தில் இருந்தார். ஒருவேளை இந்தப் போட்டியில் அவர் விளையாடி இருந்தால் இந்த சாதனையை அவராலும் எட்டியிருக்க முடியும். ஆனால் அவர் ஓய்வெடுக்க சென்ற நேரத்தை கச்சிதமாக பயன்படுத்திய ரோகித் சர்மா மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து இந்த புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் டக் அவுட்டான 2 நட்சத்திர வீரர்கள் – வாழ்க்கை முடிந்ததா?

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியல் இதோ:
1. ரோஹித் சர்மா, இந்தியா : 3308* ரன்கள் (115 இன்னிங்ஸ்)
2. மார்ட்டின் கப்டில், நியூஸிலாந்து : 3299 ரன்கள் (108 இன்னிங்ஸ்)
3. விராட் கோலி, இந்தியா :3296 ரன்கள் (89 இன்னிங்ஸ்)
4. பால் ஸ்டிர்லிங், அயர்லாந்து : 2776 ரன்கள் (102 இன்னிங்ஸ்)
5. ஆரோன் பின்ச், ஆஸ்திரேலியா : 2686 ரன்கள் (88 இன்னிங்ஸ்)

Advertisement