சூரியகுமார் யாதவ் குறித்து 11 ஆண்டுகளுக்கு முன்பே சரியாக கணித்த ரோஹித் சர்மா

Rohit-and-SKY
- Advertisement -

இந்திய டி20 கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகமாகிய சூரியகுமார் யாதவ் வெறும் 20 மாதங்களே விளையாடியுள்ள வேளையில் டி20 சர்வதேச கிரிக்கெட்டின் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் கடந்த பல ஆண்டுகளாகவே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுதுவர சூரியகுமார் யாதவ் தனது 31-ஆவது வயதில் இந்திய அணியில் விளையாட இடம் பிடித்தார். அப்படி தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சூரியகுமார் யாதவ் வெகு விரைவிலேயே டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரராக மாறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி வரை இந்திய அணி முன்னேறியதற்கு விராட் கோலியுடன் சேர்ந்து சூரியகுமார் யாதவும் முக்கிய வீரராக திகழ்ந்தார். அவர்கள் இருவரும் மட்டுமே நடைபெற்று முடிந்த இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை அரையிறுதி வரை கொண்டு சென்றனர். ஆனால் அரையிறுதியில் துரதிஷ்டவசமாக தோல்வியை சந்தித்த இந்திய அணியானது தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த தொடரின் இரண்டாவது டி20 போட்டி நேற்று மவுண்ட் மாங்கனி நகரில் நடைபெற்ற வேளையில் இந்த போட்டியிலும் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் 51 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 111 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அவரது இந்த ஆட்டம் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளை பெற்று வரும் வேளையில் சூரியகுமார் யாதவின் திறமை குறித்து 11 ஆண்டுகளுக்கு முன்பே ரோகித் சர்மா சரியாக கண்டறிந்துள்ளார் என்று ஒரு ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இருப்பினும் இவ்வளவு தாமதமாக 31 வயதில் சூரியகுமார் யாதவ் அணியில் இணையாமல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இணைந்திருந்தால் இந்திய அணி இன்னும் பலமாகி இருக்கும் என்று அந்த டிவீட்டை பார்த்து ரசிகர்கள் தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ரோகித் கடந்த 2011 ஆம் ஆண்டு பதிவிட்டுள்ள அந்த டிவீட்டில் குறிப்பிட்டதாவது : பிசிசிஐ அவார்ட் சென்னையில் நடைபெற்ற முடிந்தது. அதில் நான் பங்கேற்றதில் மகிழ்ச்சி. இன்னும் பல திறமையான கிரிக்கெட்டர்கள் இந்திய அணிக்கு வர இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மும்பையில் இருந்து சூரியகுமார் யாதவ் என்கிற பேட்ஸ்மேன் வருங்காலத்தில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : எங்க போனாலும் தோனி மட்டும் என் கூடவே இருக்காரு – தண்ணீர் பாட்டிலில் அன்பை அள்ளித் தெளித்த விராட் கோலி

கடந்த 2011-ஆம் ஆண்டே ரோஹித் சர்மா சூரியகுமார் யாதவை பெரிய வீரராக வருவார் என்று கணித்திருந்தாலும் சூரியகுமாரை யாதவிற்கு தேசிய அணியில் இடம் கிடைக்க பத்து ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement