எங்க போனாலும் தோனி மட்டும் என் கூடவே இருக்காரு – தண்ணீர் பாட்டிலில் அன்பை அள்ளித் தெளித்த விராட் கோலி

Virat Kohli MS Dhoni
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் எதிர்பார்த்ததைப் போலவே ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறியது. அந்த தொடரில் பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் சூரியகுமார் ஆகியோரது செயல்பாடுகளாலேயே இந்தியா அரையிறுதிக்கு சென்றது என்று கூறலாம். குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக உலக அளவில் சந்தித்த விமர்சனங்களை சமீபத்திய ஆசிய கிரிக்கெட் கோப்பையில் அடித்து நொறுக்கி பார்முக்கு திரும்பிய விராட் கோலி அதே புத்துணர்ச்சியுடன் இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே யாராலும் மறக்க முடியாத இன்னிங்ஸ் விளையாடி அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

அத்துடன் இங்கிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலிலும் 50 (40) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய அவர் மொத்தம் 296 ரன்களை விளாசி இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார். இருப்பினும் கோப்பையை வெல்ல முடியாத அவர் தற்போது இந்தியாவுக்கு திரும்பி உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடுத்த தொடருக்காக புத்துணர்ச்சி அடைந்து வருகிறார்.

- Advertisement -

எங்கே போனாலும் தோனி:
அந்த வகையில் தற்போது சுற்றுப்பயணத்தில் இருக்கும் விராட் கோலி ஏதோ ஒரு இடத்தில் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு பாட்டிலை கையிலெடுத்த போது அதில் முன்னாள் கேப்டன் தோனியின் படம் இருந்ததை பார்த்து மிகவும் பூரித்து போனதாக தெரிகிறது. அதனால் மகிழ்ச்சியடைந்த விராட் கோலி உடனடியாக அதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு “அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார். இந்த தண்ணீர் பாட்டிலிலும் இருக்கிறார்” என்று தோனியை குறிப்பிட்டு டேக் செய்துள்ளார்.

இங்கு விஷயம் என்னவெனில் தோனி, சச்சின் உட்பட இதர இந்திய வீரர்களை காட்டிலும் மெஸி, ரொனால்டோ ஆகியோருக்கு பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு வீரராக விராட் கோலி இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அதில் ஒரு போஸ்ட் போடுவதால் அவர் பல கோடிகளை சம்பாதிப்பதையும் நாம் அறிவோம். அப்படிப்பட்ட அவர் நினைத்திருந்தால் தொலைக்காட்சி, செய்தித்தாள் உட்பட கிட்டத்தட்ட பெரும்பாலான இடங்களில் விளம்பரங்களில் வரும் தோனியின் புகைப்படத்தை கொண்ட தண்ணீர் பாட்டிலை குடித்துவிட்டு தூக்கி எறிந்திருக்க முடியும்.

- Advertisement -

இருப்பினும் அவர் மீது இருக்கும் நட்பு, அன்பு, மரியாதை மற்றும் பாசம் காரணமாகவே ஒரு சாதாரண பாட்டிலை புகைப்படம் எடுத்து இவ்வளவு பெரிய அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் அவரது இந்த ஒரு புகைப்படத்தில் ஏராளமான பின்னணி கதைகளும் உள்ளது. ஏனெனில் என்னதான் 2008 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய விராட் கோலியை அதிரடியாக நீக்கும் அளவுக்கு இந்தியாவின் நிர்வாகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருந்தது.

ஆனாலும் அவரது திறமையை உணர்ந்த தோனி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விமர்சனங்களை சந்தித்துக் கொண்டு இன்று 34 வயதிலேயே ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு ஆரம்ப காலத்தில் அதிகப்படியான வாய்ப்புகளையும் ஆதரவையும் கொடுத்தார். அது போக 3 உலகக் கோப்பைகளை வென்ற தோனி நினைத்திருந்தால் கடைசி வரை கேப்டனாக விளையாடியிருக்க முடியும். ஆனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 2014, 2017 ஆகிய வருடங்களில் தம்மிடமிருந்த கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுத்து விராட் கோலி தலைமையில் ஒரு சாதாரண வீரராக தோனி விளையாடினார்.

அத்துடன் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக உலகமே விமர்சித்த போது தோனி மட்டுமே தமக்கு மெசேஜ் செய்து ஆதரவு கொடுத்ததாக சமீபத்தில் கூட விராட் கோலி தெரிவித்திருந்தார். அந்த வகையில் தனது கேரியரில் பெரிய உச்சத்தை எட்டுவதற்கு ஆணிவேராக திகழும் தோனியை எப்போதுமே மறக்காத காரணத்தாலேயே விராட் கோலி அடிக்கடி அவருடைய ரசிகர் என்பதை நிரூபிக்கும் வகையில் இப்படி அன்பை வெளிப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement