
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒன்றாக ஓய்வை அறிவித்திருந்தனர். அதன்பிறகு இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் அவர்கள் இருவரும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். ஆனாலும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட இருவருமே விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என இரண்டு வடிவத்தில் இருந்து வெளியேறினாலும் அடுத்த ஒருநாள் உலக கோப்பை தொடரை கைப்பற்றிய பின்னரே ஒட்டுமொத்தமாக ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற முடிவில் அவர்கள் இருவரும் இருக்கின்றனர். ஆனால் அடுத்த உலக கோப்பை தொடர் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதாலும், அதற்குள் இவர்கள் இருவருமே கிட்டத்தட்ட 40 வயதை எட்டி விடுவார்கள் என்பதாலும் இந்திய அணியின் நிர்வாகம் அவர்களை கழட்டி விடும் முனைப்பில் இருக்கின்றன.
அதோடு இனியும் அனுபவ வீரர்களான அவர்களை அணியில் வைத்திருப்பதை விட இளம் வீரர்களை வளர்த்தெடுக்கலாம் என்ற நோக்கில் நிர்வாகம் நகர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டன் ரோஹித் சர்மாவின் பதவி பறிக்கப்பட்டு புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.
ஆனாலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவருக்குமே இதுதான் கடைசி ஆஸ்திரேலியா தொடர் என்பது உறுதியாகியுள்ளது. ஏனெனில் தற்போது 37 வயதாகும் விராட் கோலியும், 38 வயதாகும் ரோகித் சர்மாவும் அடுத்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் நிச்சயம் இடம்பெற முடியாது. அதே வேளையில் அவர்கள் தொடர்ச்சியாக இந்திய அணியில் நீடிக்க வேண்டுமெனில் இனிவரும் போட்டிகளில் அனைத்திலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது.
அதோடு மட்டுமின்றி ஒருநாள் போட்டியில் மட்டுமே அவர்கள் இருவரும் விளையாடுவதால் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி இருவருமே ஃபார்ம் அவுட் ஆனாலோ அல்லது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலோ 2027 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது கடினமாகிவிடும்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 இந்திய அணி அறிவிப்பு.. அணியில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் – முழு லிஸ்ட் இதோ
எனவே இனிவரும் ஒவ்வொரு ஒருநாள் தொடரும் இவ்விரு ஜாம்பவான்களுக்கு முக்கியமான தொடராக மாறியுள்ளது. இந்திய அணிக்காக இவ்விருவருமே கேப்டனாக இருந்து பல்வேறு வெற்றிகளை பெற்றுத்தந்துள்ள வேளையில் அவர்கள் இருவரையும் ஓய்வை நோக்கி நிர்வாகம் அழுத்துவதாகவும் சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.