
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர். இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி விடை பெற விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதற்கு முன் பிசிசிஐ அவர்களை கழற்றி விடுவதற்கு தயாராகியுள்ளது.
ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ரோஹித் சர்மா தலைமையில் வென்று இந்தியா சாதனை படைத்தது. அதனால் 2027 உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியாது என்று தேர்வுக்குழு கருதுகிறது.
அதனால் அவரை இப்போதே கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய ஒருநாள் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. எனவே 40, 38 வயதில் ரோஹித், விராட் கோலி 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் இனிமேல் விராட், ரோஹித் சுயநலத்துடன் பெரிய ஸ்கோர் அடிக்கும் முனைப்புடன் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக கேப்டனாக பொறுப்பேற்ற பின் ரோஹித் சர்மா தமது சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்கி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுப்பதையே குறிக்கோளாக வைத்திருந்தார். அந்த அணுகு முறையில் 2 ஐசிசி கோப்பைகளை வென்ற அவர் பெரும்பாலும் 30, 40 ரன்களை 150 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். ஆனால் இனிமேலும் அப்படி விளையாடினால் பெரிய ரன்கள் அடிக்கவில்லை என்று சொல்லி தேர்வுக்குழு கழற்றி விடுமென உத்தப்பா எச்சரித்துள்ளார்.
இது பற்றி உத்தப்பா பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா போன்றவர் ஒருநாள் கிரிக்கெட்டில் முந்தைய காலங்களில் உயரமான ரன்கள் அடித்தார். இருப்பினும் கடந்த 3 – 4 வருடங்களாக அவர் மிகவும் வேகமாக விளையாடுகிறார். அது கேப்டனாக அவரிடம் ஏற்பட்ட மாற்றமாகும். அவருடைய அந்த அணுகுமுறை ஒருநாள் கிரிக்கெட்டை மாற்றியது”
இதையும் படிங்க: 518 ரன்ஸ்.. சச்சினை முந்திய கில்.. கிங் கோலியின் சாதனை சமன்.. வெ.இஸை பந்தாடி டிக்ளேர் செய்த இந்தியா
“சில சமயங்களில் அதிரடியாக விளையாடத் தேவையில்லை என்ற சூழ்நிலையிலும் அவர் கேப்டனாக முன்னின்று அதிரடி காட்டினார். ஆனால் தற்போது அவர் கொஞ்சம் கவனத்துடன் இருப்பார். ஏனெனில் கேப்டனாக ஒரு வீரரை அணியிலிருந்து நீக்குவது கடினமானது. இனிமேல் விராட், ரோஹித் செயல்திறன் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முன் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.