இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி தலைநகர் டெல்லியில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருடன் இணைந்து 58 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் 38 ரன்களில் அவுட்டாகி சென்றார். மறுபுறம் வந்த சாய் சுதர்சன் நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்புறம் ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்தார். 2வது விக்கெட்டுக்கு 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய அந்த ஜோடியில் சுதர்சனும் அரை சதத்தை அடித்து 87 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
இந்தியா டிக்ளேர்:
இந்தப் பக்கம் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் தன்னுடைய 7வது டெஸ்ட் சத்தத்தை அடித்து அசத்தினார். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில்லுடன் கைகோர்த்த அவர் தொடர்ந்து அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை நெருங்கிய போது 175 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தைச் சந்தித்தார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி தமது பங்கிற்கு நேர்த்தியாக விளையாடி 43 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
எதிர்ப்புறம் சிறப்பாக விளையாடிய கேப்டன் கில் தம்முடைய 10வது டெஸ்ட் சதத்தை அடித்தார். அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் நங்கூரமாக விளையாடி அரை சதத்தை அடித்த போது 44 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அப்போது 518/5 ரன்கள் எடுத்த இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
சுப்மன் கில் சாதனை:
களத்தில் கேப்டன் சுப்மன் கில் 129* ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இதையும் சேர்ந்து 2025ஆம் ஆண்டு கேப்டனாக அவர் 5 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒரு காலண்டர் வருடத்தில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. விராட் கோலி: 5 (2017)
1. விராட் கோலி: 5 (2018)
1. சுப்மன் கில்: 5 (2025)*
2. சச்சின் டெண்டுல்கர்: 4 (1997)
2. விராட் கோலி: 4 (2016)
இதையும் படிங்க: நிதீஷ் குமார் ரெட்டிக்கு நிச்சயமா தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம்.. அதுல விஷயம் இருக்கு – கேப்டன் கில் பேட்டி
இது போக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரில் அதிக ரன்கள் (2772) அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார். மறுபுறம் சுமாராக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜோமேல் வேரிக்கன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.



