
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்தான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. ஏனெனில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளதால் அந்த ஏலத்தில் பல்வேறு வீரர்கள் அணி மாற்றப்படுவார்கள். அதனால் அனைத்து அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தற்போது தங்களது எதிர்கால திட்டங்களை கருத்தில் கொண்டு பத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்துக் கொண்டு தேவையற்ற வீரர்களை வெளியேற்றும் வகையில் பட்டியலை தயார்படுத்தி வருகின்றன. அதேபோன்று இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக வீரர்களை டிரேடிங் முறையிலும் மாற்றிக் கொள்ளலாம் என்பதனால் டிரேடிங் குறித்த பல்வேறு தகவல்களும் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரை அதே விலைக்கு டிரேட் செய்ய உள்ளதாகவும் கடந்து சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் அதிகளவு பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்படி தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு வந்தால் அது நல்லது தான் என முன்னாள் சிஎஸ்கே வீரரான ராபின் உத்தப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணி வருவதை உண்மையிலேயே நான் விரும்புகிறேன். ஏனெனில் மிகவும் திறமை வாய்ந்த வீரரான அவரை சரியாக யாரும் பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். அதேபோன்று அவரது மதிப்பையும் யாரும் பெரியதாக பார்க்கவில்லை என்றும் நான் நினைக்கிறேன்.
அதனால் சிஎஸ்கே அணிக்கு அவர் வரும் பட்சத்தில் சிஎஸ்கே அணி அவருக்கு ஒரு ஃபினிஷர் ரோலோ அல்லது மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் ஒரு நிலையான ரோலோ வழங்கி அதனை சிஎஸ்கே அணி நிர்வாகம் உறுதி செய்துவிட்டால் அவரால் பேட்டிங் ஆர்டரில் கை கொடுப்பதோடு மட்டுமின்றி பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட முடியும். வாஷிங்டன் சுந்தர் ஒரு கம்ப்ளீட் ஆல்ரவுண்டர் என்பதனால் அவரது வருகை நிச்சயம் சென்னை அணியை பலப்படுத்தும்.
இதையும் படிங்க : இதே தப்பை தொடர்ந்து பண்ணா கண்டிப்பா பேட்டிங் ஆர்டர் மீது கேள்வி வரும் – ஜாஹீர் கான் காட்டம்
அதோடு அவரும் தன்னிடம் இருக்கும் திறமை சிஎஸ்கே அணிக்கு வந்தால் முழுமையாக வெளிப்படும் என்று நினைத்து உழைத்தால் அவரால் நிச்சயம் அசத்தலாக செயல்பட முடியும் என்றும் ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது. இதுவரை வாஷிங்டன் சுந்தர் 66 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 511 ரன்களையும், 39 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.