இதே தப்பை தொடர்ந்து பண்ணா கண்டிப்பா பேட்டிங் ஆர்டர் மீது கேள்வி வரும் – ஜாஹீர் கான் காட்டம்

Zaheer Khan
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரண்டு போட்டியிலுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது தோல்வியை சந்தித்து தற்போதே இந்த தொடரை இழந்துவிட்டது. இதற்கடுத்து எஞ்சியுள்ள கடைசி ஒருநாள் போட்டியானது சிட்னி நகரில் நடைபெற இருக்கிறது.

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மீது கேள்விகள் எழும் : ஜாஹீர் கான்

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் பேசப்பட்டு வரும் வேளையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மீதும் அதிகளவு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் நிறைய ஆல்ரவுண்டர்கள் இருப்பதினாலும், பேட்டிங் ஆர்டரில் ஒரு சில தவறுகளை தொடர்ந்து செய்வதாலுமே இப்படி இந்திய அணி தோல்விகளை சந்தித்து வருவதாக பலரும் பேசி வருகின்றனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுலுக்கு முன்னர் ஐந்தாவது இடத்தில் இடது கை ஆட்டக்காரரான அக்சர் பட்டேல் களமிறங்குவது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் கே.எல் ராகுலை போன்ற ஒரு திறமையான வீரரை முன்கூட்டியே விளையாட வைக்காமல் ஆல் ரவுண்டரை முன்னதாக அனுப்புவது தவறு என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் இந்த பேட்டிங் ஆர்டர் தவறு குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான ஜாகிர் கான் கூறுகையில் : தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் இதேபோன்று இருந்தால் நிச்சயம் வெளியிலிருந்து அதிகளவு கேள்விகள் வரும். ஏனெனில் அக்சர் பட்டேல் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டாலும் அவர் ஐந்தாவது இடத்தில் விளையாடுவது கேள்விகளை உண்டாக்கும்.

- Advertisement -

கே.எல் ராகுல் போன்ற ஒரு அனுபவ வீரர் களத்திற்கு முன்கூட்டியே வந்து அதிக பந்துகளை சந்தித்தால் அவரே பெரிய ரன் குவிப்பில் ஈடுபடுவார். ஆனால் அவரை பின்னுக்கு தள்ளி அக்சர் பட்டேலை ஐந்தாவது இடத்தில் களமிறக்குவது தவறு. அதேபோன்று நிதீஷ் ரெட்டி அணியில் இருக்கலாமா? வேண்டாமா? என்பதும் பேசு பொருளாக மாற வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : இந்த ஒரு காரணம் போதாதா? அடுத்த போட்டியில் அக்சர் படேலுக்கு பதிலா குல்தீப் ஆடுவார் – விவரம் இதோ

ஏனெனில் ஏற்கனவே வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் போன்ற ஆல் ரவுண்டர்கள் இருக்கும்போது கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டர் தேவையா என்று தோன்றுகிறது. இந்திய அணியின் இந்த திட்டம் சரியாகாமல் சென்று தொடர் தோல்விகளை சந்தித்தால் நிச்சயம் பேட்டிங் ஆர்டர் மீது பெரிய கேள்விகள் வரும் என ஜாகிர் கான் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement