
இந்திய கிரிக்கெட்டில் அம்பத்தி ராயுடு வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட ஒரு வீரர் என்று சொன்னால் மிகையாகாது. ஏனெனில் 2018 ஐபிஎல் கோப்பையை தோனி தலைமையில் சென்னை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடினார். அதன் காரணமாக இங்கிலாந்தில் நடைபெறவிருந்த 2019 உலகக்கோப்பையில் 4வது இடத்தில் விளையாடுவதற்கு ராயுடு தன்னுடைய திறமைகளை நிரூபித்து தயாராக காத்திருந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் 4வது இடத்தில் விளையாடுபவர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறையிலும் அசத்தக்கூடிய முப்பரிமான வீரராக இருக்க வேண்டும் என்று ராயுடு கழற்றி விடப்பட்டார். குறிப்பாக அப்போதைய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஆகியோர் அந்த காரணத்தை சொல்லி ராயுடுவை கழற்றி விட்டார்கள்.
அதை விட 2019 உலகக்கோப்பை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ராயுடு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதனால் விஜய் சங்கர் காயமடைந்த போது ராயுடு இங்கிலாந்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வுக்குழுவை விமர்சிக்கும் வகையில் ராயுடு 3டி ட்வீட் போட்டிருந்தார். அதனால் அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு மயங் அகர்வாலை இங்கிலாந்துக்கு அனுப்பி ராயுடுவை பழித்து தீர்த்துக் கொண்டது.
அதன் காரணமாக ஏமாற்றமடைந்த ராயுடு 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் ராயுடுவை ஏதோ ஒரு காரணத்திற்காக பிடிக்காததாலேயே விராட் கோலி கழற்றி விட்டதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“விராட் கோலி தமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால், யாராவது தம்முடைய அளவுக்கு இல்லை என்று உணர்ந்தால் அவர்கள் அணியிலிருந்து வெட்டப்படுவார்கள். அதற்கு ராயுடு முதன்மையான எடுத்துக்காட்டு. அவருக்காக நீங்கள் வருந்துவீர்கள். ஒவ்வொருவருக்கும் விருப்பத் தேர்வுகள் இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்”
இதையும் படிங்க: உண்மையிலே இதுமட்டும் நடந்தா எனக்கு பெருமை தான்.. இந்திய அணிக்கு திரும்புவது குறித்து – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி
“ஆனால் ஒரு வீரரை உச்சநிலைக்கு அழைத்துச் சென்ற பின் நீங்கள் அவரை மூட முடியாது. 2019 உலகக் கோப்பை ஜெர்சி, உபகரணங்கள் போன்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவர் வீட்டில் தயாராக இருந்தார். உலகக் கோப்பைக்கு நாம் சென்று விளையாடுவோம் என்று ஆசையுடன் இணைத்துக் கொண்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் நீங்கள் அவருடைய கதவை மூடி விட்டீர்கள். என்னைப் பொறுத்த வரை அது நியாயம் அல்ல” என்று கூறினார்.