
இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜூலை 23ஆம் தேதி தம்புலா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 214 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் சூரியகுமார் யாதவ் 58, ரிஷப் பண்ட் 49 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இலங்கைக்கு நிஷாங்கா 79, குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்தனர். அதனால் 140/1 என்ற நல்ல துவக்கத்தை பெற்ற இலங்கை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின் அனலாக பந்து வீசிய இந்தியா அடுத்த 5.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை எடுத்து அபார வெற்றி பெற்றது.
பின்னணியில் கம்பீர்:
அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா புதிய கேப்டன் சூரியகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது. முன்னதாக அப்போட்டியில் அனுபவமற்ற இளம் வீரர் ரியான் பராக் டெத் ஓவர்களில் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை எடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். குறிப்பாக 1.2 ஓவரில் 5 ரன்கள் மட்டும் கொடுத்த அவர் 3 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.
இந்நிலையில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் வலைப்பயிற்சியில் தம்முடைய பந்து வீச்சு திறமையை காட்டியதாக தெரிவித்துள்ளார். எனவே பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் போது பந்து வீசுமாறு கௌதம் கம்பீர் தமக்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் ரியான் பராக் பேசியது பின்வருமாறு.
“நான் பந்து வீசுவதை விரும்புகிறேன். வலைப்பயிற்சிகளில் நான் நிறைய பந்து வீசுவேன். வலைப்பயிற்சியில் எப்படி பந்து வீச வேண்டும் எங்கே பந்து வீசம் வேண்டும் என்பது பற்றி அணி நிர்வாகத்திடம் நிறைய தொடர்பு வைத்துள்ளேன். அது போன்ற சூழ்நிலைகளில் எப்படி வீச வேண்டும் என்பது பற்றி கௌதம் கம்பீருடன் சேர்ந்து தயாரானேன். அதனால் பிட்ச் சுழலும் போது 16, 17வது ஓவரில் வாய்ப்பு கிடைத்தால் நான் பந்து வீசுவேன்”
இதையும் படிங்க: ரிங்கு சிங்கிற்கு முன்னதாக ரியான் பராக் களமிறங்கியது ஏன்? போட்டிக்கு பின்னர் – சூரியகுமார் யாதவ் அளித்த பதில்
“மற்ற பவுலர்கள் என்னுடைய வேலையை எளிதாக்கினர். அவர்கள் ஏற்படுத்திய அழுத்தத்தால் நான் ஸ்டம்ப் லைனில் மட்டுமே வந்து வீச வேண்டியிருந்தது. அதே சமயம் பந்தும் நன்றாக சுழன்றது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஜூலை 28ஆம் தேதி இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.