நீங்க வேணா பாருங்க, ரோஹித் மாதிரி இவரும் பெரிய கேப்டனாக வருவாரு – ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

Ponting
- Advertisement -

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. மும்பையில் துவங்கியுள்ள இந்த தொடர் புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களில் வரும் மே 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் விளையாடுவதால் 74 போட்டிகள் கொண்ட இந்த வருடத்தின் ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த தொடரின் 2-வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Pant

- Advertisement -

சாதிப்பாரா ரிஷப் பண்ட்:
இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக ரிஷப் பண்ட் தலைமையிலான அணியினர் தீவிர வலைப் பயிற்சிக்கு பின் தயாராகி உள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டு அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் வரலாற்றிலேயே டெல்லி அணியை முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும் 2020-ஆம் ஆண்டு காயத்தால் அவர் விலகியதை அடுத்து அவருக்கு பதில் வளர்ந்து வரும் இளம் இந்திய அதிரடி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின் 2021இல் காயத்திலிருந்து குணமடைந்தத ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு திரும்பிய பின்பும் கூட அவர் மீது நம்பிக்கை வைத்த அந்த அணி நிர்வாகம் தொடர்ந்து அவரிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுத்துள்ளது.

அந்த வகையில் கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் முழுநேர கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே கடந்த வருடம் கோட்டைவிட்ட கோப்பையை இந்த வருடம் புதிய ஜெர்சியில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி எப்படியாவது ரிஷப் பண்ட் வாங்கித் தருவார் என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Pant-4

ரோஹித் மாதிரி வருவார்:
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் காலங்களில் ரோகித் சர்மாவை போல இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு ரிஷப் பண்ட் திறமை படைத்துள்ளார் என டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் போன்ற மிகவும் கடினமான அழுத்தம் நிறைந்த கிரிக்கெட் தொடர்களில் மிகப்பெரிய அனுபவம் கிடைக்கும். அதன் வாயிலாக வரும் காலங்களில் ஒரு சர்வதேச கேப்டனாகும் அளவுக்கு ரிஷப் பண்ட் வருவார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

- Advertisement -

மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற போது வெறும் 23 – 24 வயதுடைய சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் ஜொலிக்காத வீரராக இருந்தார். ஆனால் அவர் இன்று இந்த அளவுக்கு வருவார் என எதிர்பார்க்கவே இல்லை. அதே சூழ்நிலையில்தான் தற்போது ரிஷப் பண்ட் உள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமெனில் அவர்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவர்கள். தற்போது இந்திய அணியில் மிகச் சிறந்த வீரர்களாக வலம் வரும் இவர்கள் கேப்டன்ஷிப் பற்றிய நுணுக்கங்களை பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்” என கூறினார்.

Ponting

அவர் கூறுவது போல கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணியில் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வந்த ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் முறையாக கேப்டனாக பொறுப்பேற்றார். சொல்லப்போனால் அந்த சீசனின் முதல் ஒரு சில போட்டிகளில் ரிக்கி பாண்டிங் தான் மும்பை அணியின் கேப்டனாக இருந்தார்.

- Advertisement -

அதன்பின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோகித் சர்மா அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்து 5 கோப்பைகளை வென்று கொடுத்து இன்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதன் காரணமாக இன்று இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகும் அளவுக்கு அபார வளர்ச்சியும் பெற்றுள்ளார். எனவே அதே வயதில் அதேபோன்ற ஒரு சூழ்நிலையில் இருக்கும் ரிஷப் பண்ட் அடுத்தடுத்த ஐபிஎல் கோப்பைகளை வென்று வரும் காலங்களில் இந்தியாவின் கேப்டனாக வருவார் என்று உறுதியாக நம்புவதாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

mivsdc

வருங்கால இந்திய கேப்டன்:
“ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணத்தை போன்றே ரிஷப் பண்ட் பயணமும் உள்ளது. ஒரு இளம் வீரராக கேப்டன் பொறுப்பை ஏற்று ஒரு அணியை வெற்றிகரமானதாக மாற்ற தினந்தோறும் பாடங்களை கற்று வருகிறார். எனவே அவரும் ரோகித் சர்மாவை போன்றதொரு உயரத்தை எட்டுவார் என நம்புகிறேன். இது ஐபிஎல் தொடரில் என்னுடைய 5-வது சீசன் ஆகும். இந்த காலகட்டங்களில் ரிஷப் பண்ட் வளர்ச்சி அபாரமாக இருந்துள்ளது. அவர் ஒரு நல்ல கேப்டனாக வருவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன்.

- Advertisement -

குறிப்பாக கடந்த 8 – 12 மாதங்களில் கேப்டனாக அவர் நிறைய சாதனைகளை செய்து புதிய உயரங்களை எட்டி உள்ளார். அவருக்கு இன்னும் என்னவெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அதை எல்லாம் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்” என இதுபற்றி ரிக்கி பாண்டிங் மேலும் தெரிவித்துள்ளார். தற்போது 34 வயதை கடந்துவிட்ட ரோகித் சர்மா அடுத்த ஒரு சில வருடங்களுக்கு மட்டுமே இந்திய அணியின் கேப்டனாக இருக்க முடியும் என்பதால் அவர் தலைமையில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்களை துணை கேப்டன்களாக அறிவித்துள்ள பிசிசிஐ அதில் யார் சிறப்பாக செயல்படுகிறாரோ அவரை வருங்கால இந்தியாவின் கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022, 2வது போட்டி : முதல் வெற்றி யாருக்கு? மும்பை – டெல்லி ஆகிய அணிகளின் உத்தேச 11 பேர் அணி இதோ

அப்படிப்பட்ட நிலையில் அடுத்த சில வருடங்களில் ரிஷப் பண்ட் ஐபிஎல் கோப்பையை வென்றால் கண்டிப்பாக இந்திய அணியின் கேப்டனாகவும் அளவுக்கு உயர்ந்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே அவர் பேட்டிங்கில் தன்னை ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரராகவும் தரமான விக்கெட் கீப்பராகவும் நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement