
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54-வது லீக் போட்டியானது நேற்று தர்மசாலா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 91 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களையும் குவித்தனர். லக்னோ அணி சார்பாக ஆகாஷ் மகாராஜ் சிங் மற்றும் திக்வேஷ் ராதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் மட்டுமே குவித்ததால் பஞ்சாப் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 74 ரன்களையும், அப்துல் சமாத் 45 ரன்களையும் குவித்தனர்.
பஞ்சாப் அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : இந்த போட்டியின் போது நாங்கள் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்து விட்டோம். முக்கியமான நேரங்களில் கேட்சை தவறவிட்டால் அதற்காக கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும்.
நாங்கள் இந்த போட்டியில் சரியான இடத்தில் பந்துவீச வில்லை என்று நினைக்கிறேன் அதுவே தோல்விக்கு காரணம். இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்தாலும் அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த போட்டியில் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் மிடில் ஆர்டர் அழுத்தத்தை சந்தித்தது. மிடில் ஆர்டரில் எங்களாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இதையும் படிங்க : நல்லவேளை அந்த ரெக்கார்ட் தெரியாம போச்சு.. லக்னோவை சாய்க்க இதான் காரணம்.. கேப்டன் ஸ்ரேயாஸ் பேட்டி
எல்லா போட்டியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் மட்டுமே சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைப்பது தவறு. ஒவ்வொருவருமே தங்களது பணியை சிறப்பாக செய்ய வேண்டும். இந்த போட்டியில் இலக்கு பெரியதாக இருந்ததாலே தோல்வியை சந்திக்க நேர்ந்தது என ரிஷப் பண்ட் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.