
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பாடர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை மூன்றுக்கு ஒன்று அல்லது நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியிருந்தது.
ஆனாலும் இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் இந்த தொடரில் சமநிலையில் இருக்கும் வேளையில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி இன்று பிரிஸ்பேன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்துள்ளதால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மான ரிஷப் பன்ட் இந்த மைதானத்தில் உள்ள தனது நினைவுகள் குறித்து பேசியிருந்தார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே இந்த மைதானத்திற்குள் நுழையும்போது பாசிட்டிவான எண்ணங்கள் இருக்கின்றன. இந்த தருணம் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது. கடந்த முறை நான் இங்கு விளையாடிய ஆட்டம் எனக்கு இந்த முறையும் உதவும் என்று தன்னம்பிக்கையை அளிக்கிறது.
மேலும் அப்போது நான் சிறப்பாக விளையாடிய நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளதால் இம்முறையும் இங்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டியது அவசியம் அந்த வகையில் இந்த மைதானத்தில் நிச்சயம் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று தோன்றுகிறது. மற்ற இடங்களை காட்டிலும் ஒரு கால் முன்னதாக வைத்து நுழையும் அளவிற்கு என்னுடைய பாசிட்டிவான எண்ணம் இந்த மைதானத்தில் இருக்கிறது என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பும்ரா அந்த 7 ஜாம்பவான்களின் கலைவை.. இது மட்டும் இல்லனா லெஜெண்டா வருவாரு.. கிரேக் சேப்பல் பாராட்டு
கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் போது கடைசியாக நடைபெற்ற காபா போட்டியில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை அந்த மைதானத்தில் தோற்கடித்து இந்திய அணி வரலாற்று சாதனை வெற்றியினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.