இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். வித்தியாசமான பவுலிங் ஆக்சன் வைத்து எதிரணிகளை திணறடிக்கும் அவர் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா 17 வருடங்கள் கழித்து வெல்ல உதவினார். அதே போல தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் அவர் அபாரமாக செயல்பட்டு வருகிறார்.
அதனால் ஜஸ்ப்ரித் பும்ராவை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட எதிரணி வீரர்களே பாராட்டுகிறார்கள். அந்தளவுக்கு அசுத்தம் அவர் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராகவும் ஜொலித்து வருகிறார். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா ஜாம்பவான் வீரர்களின் கலவை என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல் பாராட்டியுள்ளார்.
ஜாம்பவான்களின் கலவை:
இருப்பினும் வித்தியாசமாக பந்து வீசுவதால் ஜஸ்ப்ரித் பும்ரா நீண்ட காலம் விளையாடுவது கடினம் என்று அவர் கூறியுள்ளார். அதையும் தாண்டி நீண்ட காலம் விளையாடினால் ஜஸ்ப்ரித் பும்ரா மகத்தான ஜாம்பவான் வீரராக வருவதற்கான அனைத்து திறமைகளை கொண்டுள்ளதாகவும் கிரேக் சேப்பல் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ஜஸ்ப்ரித் பும்ராவை வேறுபடுத்துவது அவரது திறமைகளின் கலவையாகும். மால்கம் மார்சலின் உட்படும் தன்மை, டென்னிஸ் லில்லியின் ஆக்ரோஷம், ரிச்சர்ட் ஹாட்லியின் கட்டுப்பாடு, ஆண்டி ராபர்ட்ஸின் உத்தி, வாசிம் அக்கரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோரின் ரிவர்ஸ் ஸ்விங், டேல் ஸ்டைனின் அதிரடி திறந்து, ரபாடாவின் நவீன் கிரிக்கெட் தேவையான பன்முகத்தன்மை ஆகியவை பும்ராவிடம் உள்ளது”
ஜாம்பவானாக பும்ரா:
“நாசர் ஹுசைன் சமீபத்தில் தெரிவித்தது போல் அவர் முழுமையான பவுலர். இருப்பினும் அவர் இப்போதே தனது முதுகில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதனால் அவர் நீண்ட கேரியரை கொண்டிருப்பாரா என்பது உறுதியாக தெரியாது. ஆனால் ஒருவேளை நீண்ட காலம் விளையாடினால் மேற்குறிப்பிட்ட ஜாம்பவான்கள் பட்டியலில் அவரும் இருப்பார்”
இதையும் படிங்க: 4 ஃபோர்ஸ் 6 சிக்ஸ்.. செமி ஃபைனலில் ரஜத் படிடார் அபாரம்.. ஆர்சிபி ரசிகர்கள் ஹேப்பி.. ஃபைனலில் யார்?
“அந்த காலத்து ஜாம்பவான்கள் அனைவருக்கும் அடித்தளத்தை அமைத்தார்கள். ஆனால் ஜஸ்ப்ரித் பும்ரா தம்முடைய சொந்த வழியில் வருங்கால தலைமுறைக்கு நம்பிக்கை கொடுக்கும் வேகப்பந்து வீச்சாளராக மரபை உருவாக்குகிறார். அவரின் அமைதியான தீவிரம் மற்றும் துல்லியம் ஆகியவை அவரை மிகவும் நைட் மேர் பவுலராக மாற்றுகிறது” என்று கூறினார். முன்னதாக வித்தியாசமாக பந்து வீசுவதால் 16 – 17 வயதிலேயே 6 – 7 மாதத்திற்கு பின் இவரால் தாக்குப்பிடிக்க முடியாது என்று பலரும் தன்னிடம் சொன்னதை தாண்டி தற்போது விளையாடி வருவதாக பும்ரா சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.



