
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த அவர் இந்த தொடரை அற்புதமாக ஆரம்பித்து இருந்தார்.
அதன்பின்னர் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் 25 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 65 ரன்களையும் குவித்து அசத்தினார். பின்னர் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 74 ரன்களை குவித்த அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது 9 ரன்கள் அடித்தார்.
இப்படி மொத்தமாக இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 425 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார். இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட் இந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் மேலும் 101 ரன்களை அடிக்கும் பட்சத்தில் ஒரு மாபெரும் வரலாற்று சாதனைக்காக காத்திருக்கிறார்.
அதனை அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போதே செய்ய வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அந்த வகையில் ரிஷப் பண்ட் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்த தொடரில் இதுவரை 6 இன்னிங்சில் 425 ரன்கள் குவித்துள்ள அவர் மேலும் 101 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை குவித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக முதலிடத்திற்கு செல்வார்.
இதற்கு முன்னதாக கடந்த 1964-ஆம் ஆண்டு புத்தி குந்திரன் என்பவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 525 ரன்கள் குவித்ததே இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒரு டெஸ்ட் தொடரில் அடித்த அதிக ரன்களாக இருந்து வருகிறது. அவருக்கு அடுத்து தற்போது ரிஷப் பண்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : இதுவரை இங்கு ஜெயிச்சதில்லை.. சச்சினுக்கு அப்புறம் 35 வருஷமா யாரும் இதை பண்ணல – மான்செஸ்டரில் காத்திருக்கும் சவால்
இன்னும் இந்த தொடரில் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள வேளையில் 101 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்த வரலாற்று சாதனை ரிஷப் பண்ட் மிஞ்சுவார் என்று நம்பப்படுகிறது. அதோடு அப்படி அவர் அந்த சாதனையை நிகழ்த்தும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே தொடரில் 500 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரராக சாதனையை நிகழ்த்துவார். அதுமட்டும் இன்றி உலகளவில் இந்த சாதனையை செய்யும் நான்காவது வீரராகவும் ரிஷப் பண்ட் மாற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.