நோ ரோஹித், பும்ரா – ஒரே ஒரு இந்தியருக்கு இடம் – 2022ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி கனவு டெஸ்ட் அணி இதோ

Rishabh-Pant-and-Ravindra-Jadeja
- Advertisement -

2022 காலண்டர் வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பாராட்டும் வகையில் அவர்களுக்கு விருதுகளை அறிவித்து சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி கௌரவித்து வருகிறது. அதில் தனிப்பட்ட விருதுகள் விரைவில் அறிவிக்கப்படும் நிலையில் முதலாவதாக 2022ஆம் ஆண்டு சிறந்து விளங்கிய வீரர்களை கொண்ட கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் முதலாவதாக அறிவிக்கப்பட்ட கனவு டி20 அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் இடம் பிடித்த நிலையில் கனவு ஒருநாள் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்கள்.

அந்த வரிசையில் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்த அணிக்கு சந்தேகமின்றி இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏனெனில் 2019 முதல் ஜோ ரூட் தலைமையில் சொந்த மண்ணில் கூட வெற்றி பெறுவதற்கு திண்டாடிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது வருவதற்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 போல அதிரடியாக விளையாடி எதிரணிகளை அடித்து நொறுக்கி தொடர் வெற்றிகளை குவித்து அதிரடி படையாக மாறியுள்ளது.

- Advertisement -

கனவு டெஸ்ட் அணி:
குறிப்பாக சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் இந்தியாவை தோற்கடித்த அந்த அணி சமீபத்தில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் தெறிக்க விட்டு மிரட்டலாக செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த வருடம் 870 ரன்களையும் 26 விக்கெட்களையும் எடுத்த காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் கேப்டன் மற்றும் ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் இங்கிலாந்து அணியிலிருந்து 136, 162, 71*, 106, 114* என தொடர்ந்து அதிரடியாக ரன்களை குவித்து முக்கிய பங்காற்றிய ஜானி பேர்ஸ்டோ 36 விக்கெட்டுகளை எடுத்த ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அணியில் ஒரே இந்திய வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் தேர்வாகி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த வருடம் ஜனவரியில் தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற தொடரில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்த அவர் மொத்தமாக 12 இன்னிங்ஸ்சில் 680 ரன்களை 61.81 என்ற சிறப்பான சராசரியில் எடுத்து அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

மேலும் 21 சிக்ஸர்களை விளாசி, 23 ஸ்டம்பிங் செய்து, 6 கேட்ச்களையும் பிடித்து அசத்திய அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் விளையாடுவதை பார்க்க விரும்புவதாக ஐசிசி தங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தில் மனதார பாராட்டியுள்ளது. கடந்த வருடம் ஜனவரியில் தென்னாபிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்று தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை கோட்டை விட்ட இந்தியா இங்கிலாந்தில் நடைபெற்ற 5வது போட்டியிலும் தோற்று 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் மட்டுமே செய்தது. அதனாலேயே இந்த அணியில் மேற்கொண்டு இந்திய வீரர்கள் இடம் பிடிக்கவில்லை.

இந்த அணியில் பேட்டிங் வரிசையில் 1080 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, 687 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீசின் கிரைக் ப்ரத்வெய்ட், 957 ரன்கள் விளாசி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறிய ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்ஷேன், 1184 ரன்களை விளாசிய பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆகியோரும் இடம் பிடித்துள்ளார்கள். அதே போல் சுழல் பந்து வீச்சாளராக 47 விக்கெட்களை சாய்த்த ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

மேலும் வேகப்பந்து வீச்சாளர்கள் பிரிவில் 36 விக்கெட்டுகளை எடுத்த பட் கமின்ஸ், 47 விக்கெட்களை சாய்த்த ககிஸோ ரபாடா ஆகியோரும் இந்த அணியில் தேர்வாகியுள்ளார்கள். 2022 ஐசிசி கனவு டெஸ்ட் அணி இதோ:

இதையும் படிங்க: விராட் கோலியின் வரலாற்று சாதனையை உடைத்த சுப்மன் கில் – பாபர் அசாமின் உலக சாதனையை சமன் செய்து அபாரம்

உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா), க்ரைக் ப்ரத்வைட் (வெஸ்ட் இண்டீஸ்), மார்னஸ் லபுஸ்ஷேன் (ஆஸ்திரேலியா), பாபர் அசாம் (பாகிஸ்தான்), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), பென் ஸ்டோக்ஸ் (கேப்டன் – இங்கிலாந்து), ரிஷப் பண்ட் (கீப்பர் – இந்தியா), பட் கமின்ஸ் (ஆஸ்திரேலியா), காகிஸோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து), நேதன் லயன் (ஆஸ்திரேலியா)

Advertisement