விராட் கோலியின் வரலாற்று சாதனையை உடைத்த சுப்மன் கில் – பாபர் அசாமின் உலக சாதனையை சமன் செய்து அபாரம்

Babar Azam Shubman Gill Virat Kohli
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய இந்தியா ஜனவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியிலும் 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தூரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 385/9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 212 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 507 நாட்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்து 101 (85) ரன்கள் குவித்து அவுட்டானார்.

அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய சுப்மன் கில் அவரை விட அதிரடியாக செயல்பட்டு 13 பவுண்டரி 5 சிக்ஸருடன் 112 (78) ரன்கள் குவித்த நிலையில் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா 54 (38) ரன்களை அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதைத்தொடர்ந்து 386 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு பின் ஆலன் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் 2வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஹென்றி நிக்கோலஸ் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருடன் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே 12 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்து 138 (100) ரன்கள் விளாசி போராடி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சுப்மன் கில் உலகசாதனை:
ஆனால் அவருக்குப்பின் டார்ல் மிட்சேல் 24, டாம் லாதம் 0, கிளன் பிலிப்ஸ் 5, மைக்கேல் பிரேஸ்வெல் 26, மிட்சேல் சாட்னர் 34 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 295 ரன்களுக்கு சுருண்ட நியூஸிலாந்து பரிதாபமாக தோற்றது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் இத்தொடரின் கோப்பையை வென்ற இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

அதை விட சமீபத்திய இலங்கைத் தொடரையும் வென்ற இந்தியா தொடர் வெற்றிகளால் தரவரிசையில் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சார்துல் தாகூர் ஆட்டநாயகன் விருதை வென்ற நிலையில் 208, 40, 112 என மொத்தமாக 360 ரன்கள் குவித்து தொடர் முழுவதும் அசத்திய சுப்மன் கில் தொடர் நாயகன் விருதை வென்றார். அத்துடன் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் பைனலுக்கு தகுதி பெறாத இந்தியா விளையாடிய 3 போட்டிகளில் அதிகபட்சமாக விராட் கோலி 357 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். தற்போது அதை முறியடித்துள்ள அவர் உலக அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பாகிஸ்தானின் பாபர் அசாம் உலக சாதனையை உடைப்பதை ஒரு ரன்னில் தவற விட்டாலும் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. சுமன் கில் : 360, நியூசிலாந்துக்கு எதிராக, 2023
2. பாபர் அசாம் : 360, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2016
3. இம்ருல் கெய்ஸ் : 349, ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2018

முன்னதாக 2019இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி காயம் மற்றும் சுமாரான செயல்பாடுகளால் வெளியேறிய சுப்மன் கில் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் அதிக ரன்கள் குவித்து மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று அசத்திய அவர் தற்போது நியூசிலாந்து தொடரில் இரட்டை சதமடித்து அதிக ரன்கள் குவித்து மீண்டும் தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.

இதையும் படிங்க: IND vs NZ : 2 ஓவரில் ஆட்டத்தின் முடிவையே மாற்றிய ஷர்துல் தாகூர். உண்மையிலே நீங்க லார்ட் தான் – ரசிகர்கள் பாராட்டு

அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டில் பேட்டிங் துறையில் வருங்கால சூப்பர் ஸ்டாராகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் அவர் தன்னை அடையாளப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement