
வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்கியது. மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்திற்கு துவக்க வீரர்கள் ஜாகிர் ஹசன் 0, சாத்மன் இஸ்லாம் 24 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்தில் அவுட்டானார்கள்.
அதனால் 29-2 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக கேப்டன் நஜ்முல் சாண்டோ – மோனிமுல் ஹைக் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த ஜோடி வங்கதேசத்தை சரிவிலிருந்து காப்பாற்றியது. அப்போது கேப்டன் ரோகித் சர்மா அந்த ஜோடியை பிரிப்பதற்காக அஸ்வினை கொண்டு வந்தார்.
அதைத்தொடர்ந்து அஸ்வின் வீசிய 29வது ஓவரின் முதல் 4 பந்துகளை நஜ்முல் சாண்டோ நேர்த்தியாக எதிர்கொண்டு தடுப்பாட்டம் ஆடினார். அதை கவனித்த ரிசப் பண்ட் “ஆஷ் பாய் இவருக்கு கொஞ்சம் ஃபுல்லர் லென்த் பந்தை வீசங்கள்” என்று சொன்னது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக கேட்டது. அஸ்வினும் அதைக் கேட்டு அடுத்த பந்தை சாண்டோவின் காலுக்கு கொஞ்சம் முன்னே வீசினார்.
ஆச்சரியப்படும் வகையில் அதை சாண்டோ சரியாக கணிக்கத் தவறியதால் பந்து அவருடைய காலில் பட்டது. உடனடியாக இந்திய அணியினர் எல்பிடபிள்யூ முறையில் கேட்டதை தொடர்ந்து நடுவரும் அவுட் கொடுத்தார். அந்த வகையில் தோனியை போல பேட்ஸ்மேனின் ஆட்டத்தை சரியாக கனித்து ஐடியா கொடுத்த ரிஷப் பண்ட் வங்கதேச கேப்டனை அஸ்வின் 31 ரன்களில் அவுட்டாக்க உதவினார்.
அதே போல மறுபுறம் மோனிமுல் ஹைக் நங்கூரமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மீண்டும் அஸ்வின் 33வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை முட்டி போட்டி அடிக்க முயற்சித்த ஹைக் முழுமையாக தவற விட்டதால் பந்து கிட்டத்தட்ட அவருடைய தாடையில் அடித்தது. அதைப் பார்த்த ரிசப் பண்ட் அடுத்த பந்தை வீசுவதற்கு முன் “இவரிடம் ஹெல்மட்டை வைத்து கூட நாம் எல்பிடபிள்யூ எடுக்க முடியும்” என்று சொல்லி கலாய்த்தார்.
இதையும் படிங்க: கான்பூர் மைதானத்தில் வங்கதேச ரசிகர் தாக்கப்பட்டாரா? போலீசார் தரப்பில் சொல்வது என்ன? – விவரம் இதோ
அதாவது மோனிமுல் ஹைக் கொஞ்சம் உயரம் குறைந்தவராக இருக்கிறார். எனவே முட்டி போட்டு அடிக்கும் போது பந்து அவருடைய ஹெல்மெட்டில் பட்டால் கூட நமக்கு எல்பிடபிள்யூ முறையில் விக்கெட் கிடைக்கும் என்று ரிஷப் பண்ட் கலாய்த்தார். அதை ரசிகர்களுக்கு வர்ணனையில் தெளிவாகச் சொன்ன சுனில் கவாஸ்கர் சிரித்து மகிழ்ந்தார். இறுதியில் மழையால் முடிவுக்கு வந்த முதல் நாள் ஆட்டத்தில் 107-3 ரன்கள் எடுத்துள்ள வங்கதேசத்துக்கு ஹைக் 31*, ரஹீம் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.