
இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய எட்டு அணிகள் மோதும் ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரானது இன்று பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கி மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி இன்று கராச்சி நகரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற இருக்கிறது.
அடுத்ததாக நாளை பிப்ரவரி 20-ஆம் தேதி இந்திய அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதற்காக ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாய் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நாளைய இந்த முதல் போட்டியை இந்திய அணி வெற்றிகரமாக ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் நிர்வாகத்தின் மீது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அதிருப்தியில் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் சிக்கிய அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு வருகிறார். அவருக்கு பதிலாக கே.எல் ராகுலே முதன்மை விக்கெட் கீப்பராக ஒருநாள் அணியை பொறுத்தவரை செயல்பட்டு வருகிறார்.
இவ்வேளையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கே.எல் ராகுல் தான் முதன்மை விக்கெட் கீப்பர் என்று கௌதம் கம்பீர் அறிவித்திருந்தார். இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ரிஷப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பராக வெளியில் அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த ரிஷப் பண்ட் அணி நிர்வாகத்தின் மீது வேற்றுமையில் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : விராட் கோலியுடன் பாபர் கம்பேர் பண்றவங்க முட்டாள்.. ஆனா 2 பேருமே தடுமாறுறாங்க.. கம்ரான் அக்மல்
மேலும் தனது பெயர் ஒருநாள் அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறாததற்கு காரணம் வெளியில் இருந்து வரும் அழுத்தம் தான் என்றும் ரிஷப் பண்ட் புலம்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எது எப்படி இருப்பினும் இந்த தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.