தமிழ்நாட்டில் நடைபெறும் டிஎன்பிஎல் போல டெல்லியில் புதிய டி20 கிரிக்கெட் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லி பிரிமியர் லீக் எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ள அந்தத் தொடர் ஆகஸ்ட் 17ஆம் தேதியான நேற்று தலைநகர் டெல்லியில் துவங்கியது. மொத்தம் 6 அணிகள் விளையாடும் அந்தத் தொடரில் ரிஷப் பண்ட், ஷிகர் தவான், இஷாந்த் சர்மா போன்ற டெல்லியைச் சேர்ந்த நிறைய நட்சத்திர வீரர்கள் கலந்து விட்டனர்.
அந்தத் தொடர் துவங்குவதற்கு முன்பாக ரிஷப் பண்ட்டுக்கு டெல்லி மாநில வாரியம் சார்பில் சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. குறிப்பாக கடந்த வருடம் கார் விபத்தால் சந்தித்த காயத்திலிருந்து உயிர் தப்பிய அவர் குணமடைந்து மீண்டும் இந்தியாவுக்காக விளையாட துவங்கியுள்ளார். அந்த வாய்ப்பில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உதவினார்.
பாராட்டும் விமர்சனமும்:
குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மிகவும் சவாலான பிட்ச்சில் சிறப்பாக விளையாடிய அவர் மொத்தம் 171 ரன்கள் குவித்தார். அதே போல விக்கெட் கீப்பராக 13 கேட்ச்களை பிடித்த அவர் 1 ஸ்டம்பிங் செய்து வெற்றியில் பங்காற்றினார். அதனால் அவருக்கு டெல்லி மாநில வாரியத் தலைவர் ரோகன் ஜெட்லி மற்றும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா ஆகியோர் அவரை பாராட்டி கௌரவித்து பரிசுத்தொகை வழங்கினர்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற முதல் போட்டியில் புராணி டெல்லி மற்றும் தெற்கு டெல்லி அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த புராணி டெல்லி 20 ஓவரில் 197/3 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அர்பித் ராணா 59, கேப்டன் ரிஷப் பண்ட், லலித் யாதவ் 34* (21) ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தெற்கு டெல்லி அணிக்கு அதிகபட்சமாக பிரியான்ஷ் ஆர்யா 58, ராய் 41, கேப்டன் ஆயுஷ் படோனி 57 ரன்கள் அடித்து 19.1 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.
அதனால் இப்போட்டியில் டெல்லிய அணியின் தோல்விக்கு கேப்டன் ரிஷப் பண்ட் முக்கிய காரணமானதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். ஏனெனில் 3வது இடத்தில் களமிறங்கிய அவர் கிட்டத்தட்ட 200 ரன்கள் அடிக்கப்பட்ட ஃபிளாட்டான பிட்ச்சில் மிகவும் திண்டாட்டமாக விளையாடி 35 (32) ரன்களை 109.37 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டானார். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் கொஞ்சம் கூட அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறினார்.
இதையும் படிங்க: 224/5 டூ 246 ஆல் அவுட்.. 32 வருடம் கழித்து வரலாறு படைக்கும் வாய்ப்பை நழுவவிட்ட வெ.இ.. தெ.ஆ மிரட்டல்
இத்தனைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நேதன் லயன் போன்ற ஸ்பின்னர்களை அவர் அடித்து நொறுக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் அதே ஆட்டத்தை அவர் டி20 கிரிக்கெட்டில் வெளிப்படுத்த தடுமாறுகிறார். அதனாலேயே இதுவரை இந்திய டி20 அணியில் இதுவரை அவருக்கு நிரந்தரமான இடம் கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.



