வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டி மழையால் டிராவில் முடிந்தது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி கயானா நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் வெறும் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சொல்லப்போனால் முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் என 97/9 தென்னாப்பிரிக்கா தடுமாறியது. அப்போது 10வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேன் பியேட் 38*, நன்ரே பர்கர் 23 ரன்கள் விளாசி தென்னாப்பிரிக்காவை ஓரளவு காப்பாற்றினர்.
சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக சமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக வியான் முல்தார் 4, நன்ரே பர்கர் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதைத் தொடர்ந்து 16 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென்னாபிரிக்காவுக்கு டீ ஜோர்சி 39, ஐடன் மார்க்ரம் 51, ஸ்டப்ஸ் 24, கெய்ல் வேர்ரின் 59, வியான் முல்தார் 34 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதனால் ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்கா 224/5 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அப்போது அபாரமாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் மேற்கொண்டு 22 ரன்கள் மட்டுமே கொடுத்து எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவை 246 ரன்களுக்கு சுருட்டியது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜெய்டேன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இறுதியில் இரண்டரை நாட்களில் 200க்கும் மேற்பட்ட ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் போராடி வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மீண்டும் மிரட்டலாக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா 222 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆல் அவுட்டாக்கி 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க: இந்திய அணியில் அவர் ஒரு உலகத்தரமான வீரர்.. ஆனா அவரை பத்தி யாரும் அதிகமா பேச மாட்றாங்க – பென் டக்கெட் கருத்து
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 45, காவெம் ஹோட்ஜ் 29 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் மற்றும் ரபாடா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 1 – 0 (2) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா இத்தொடரின் கோப்பையை வென்று அசத்தியது. மறுபுறம் 1992க்குப்பின் 32 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் போராடாமலேயே நழுவ விட்டது.



