
ஐபிஎல் 2022 தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் மே 21-ஆம் தேதி நடைபெற்ற 69-வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் சந்தித்தன. இப்போட்டியில் டெல்லிக்கு வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் வாழ்வா – சாவா போட்டியாக அமைந்தது. மறுபுறம் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை வென்றால் மட்டுமே 5-வது இடத்தில் இருக்கும் பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டதால் விராட் கோலி உட்பட அனைத்து பெங்களூரு வீரர்களும் ரசிகர்களும் மும்பைக்கு ஆதரவளித்தனர்.
அந்த நிலைமையில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவர்களில் போராடி 159/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரங்கள் டேவிட் வார்னர் 5 (6) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த சில ஓவர்களில் பிரித்திவி ஷா 4 (23) சர்பராஸ் கான் 10 (7) என சொற்ப ரன்களில் அவுட்டானதால் 50/4 என அந்த அணி திணறிய போது கேப்டன் ரிஷப் பண்ட் 39 (33) ரன்களும் ரோவ்மன் போவல் 43 (34) ரன்களும் அக்சர் படேல் 19* (10) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். மும்பை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
மும்பை வெற்றி:
அதை தொடர்ந்து 160 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 48 (35) ரன்களும் அவருடன் அதிரடி காட்டிய தேவால்ட் ப்ரேவிஸ் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 37 (33) ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். அதனால் 95/3 என மிடில் ஓவரில் தடுமாறிய அந்த அணிக்கு கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கிய டிம் டேவிட் வெறும் 11 பந்தில் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 34 ரன்கள் குவித்து வெற்றியை உறுதிசெய்து ஆட்டமிழந்தார்.
அவருடன் திலக் வர்மா 21 (17) ரன்களும் ரமன்தீப் சிங் 13* (6) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 19.1 ஓவரில் 160/5 ரன்களை எடுத்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றி பெற்றது. டெல்லி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். மும்பையின் இந்த அட்டகாசமான வெற்றியால் டெல்லியை முந்திய பெங்களூரு குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகளை தொடர்ந்து 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதால் அந்த அணி வீரர்களும் ரசிகர்களும் மும்பையை கொண்டாடினார்கள்.
பண்ட் தவறு:
மறுபுறம் வாழ்வா சாவா போட்டியில் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களை சேர்க்க தவறிய டெல்லி பந்துவீச்சிலும் முடிந்த அளவுக்கு போராடிய போதிலும் முக்கிய விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே எடுக்கத் தவறியதால் தோல்வியடைந்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் பெட்டி படுக்கையை கட்டியது.
1. குறிப்பாக மும்பை 95/3 என்ற சூழ்நிலையில் களமிறங்கிய டிம் டேவிட் 0 ரன்களில் இருந்த போது ஷர்துல் தாகூர் வீசிய பந்தில் எட்ஜ் வாங்கிய நிலையில் அந்த பந்தை டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கச்சிதமாக பிடித்தார். அதை அவுட் என்று உணர்ந்த அவரும் தாகூரும் அம்பயரிடம் அவுட் கேட்டனர். ஆனால் ஏற்கனவே இந்த சீசனில் மோசமாக செயல்பட்டு வரும் அம்பயர்கள் அதை அவுட் கொடுக்காத நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் தாகூர் ஆகியோர் உறுதியாக அவுட் தான் என்பதை உணராமல் ரிவ்யூ எடுக்காமல் கோட்டை விட்டனர்.
2. ஆனால் டிவி ரிப்ளையில் பார்க்கும் போது அது தெளிவாக அவுட் என தெரிந்தது. அதன்பின் அடுத்த 10 பந்துகளில் 34 ரன்களை பறக்க விட்ட டேவிட் டெல்லியின் முதல் கோப்பை கனவை தூள் தூளாக நொறுக்கினார்.
3. அத்துடன் 37 ரன்கள் எடுத்த தேவால்ட் பிரேவியஸ் 25 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ஒரு கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த அழகான கேட்சை கோட்டை விட்ட ரிஷப் பண்ட் நேற்றைய பரபரப்பான தருணத்தில் செய்த 2 தவறுகளால் டெல்லியின் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு மீண்டும் கனவாகவே போனது.
இதையும் படிங்க : இந்த வருஷம் இப்படி மோசமா தோத்து வெளியேபோனதும் நல்லதுதான். ஏன் தெரியுமா? – கோச் பிளமிங் பேட்டி
அந்த ரிவ்யூ ஏன் எடுக்கவில்லை என்று போட்டி முடிந்த பின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ரிஷப் பண்ட் கூறியது பின்வருமாறு. “அந்த தருணத்தில் ஏதோ ஒன்றை உணர்ந்ததால் இதர வீரர்களிடம் ரிவ்யூ எடுக்கலாமா என்று இருமுறை கேட்டேன். ஆனால் யாருமே ஆதரவு கொடுக்காததால் அவுட் இருக்காதோ என்று நினைத்து எடுக்காமல் விட்டு விட்டேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.