
2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது ஹைபிரிட் முறையில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு செல்ல மறுத்த வேளையில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயிலேயே நடக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி சிறப்பு சலுகை வழங்கி ஏற்கனவே அட்டவணையையும் வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல் ராகுல் தான் என்பதை இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் கே.எல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்த வேளையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவரே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் ரிஷப் பண்ட் வெளியில் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்டின் சிறு வயது பயிற்சியாளர் தேவேந்தர் சர்மா :
ரிஷப் பண்டை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யவில்லை என்றாலும் ஒரு சாதாரண பேட்ஸ்மேனாக இந்திய அணி தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட்டை கீப்பராக அல்லாமல் பேட்ஸ்மேனாக சேர்த்தாலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். எப்பொழுதுமே ரிஷப் பண்ட் ஒரு மேட்ச் வின்னராக தன்னை நிரூபித்திருக்கிறார்.
அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய விபத்திற்கு பிறகும் மீண்டு வந்த அவர் டி20 உலக கோப்பை மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். எப்பொழுதுமே எதிர்த்து போட்டியிட வேண்டும் என்கிற எண்ணம் நிறைய உடையவர் ரிஷப் பண்ட். அவரால் நிச்சயம் இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட முடியும். அவருடைய அதிரடியான ஆட்டத்தில் அவர் சில முறை விரைவில் ஆட்டமிழந்திருந்தாலும் அது அவருடைய இயல்பான குணம்.
இதையும் படிங்க : இந்த ஒரு கண்டிஷனோட பேமிலியை துபாய்க்கு வர சொல்லுங்க.. இந்திய வீரர்களுக்கு பச்சைக்கொடி காட்டிய பி.சி.சி.ஐ
நிச்சயம் அவரால் மிகப் பெரிய இன்னிங்ஸ்களை ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாட முடியும். எனவே என்னை பொறுத்தவரை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதற்காக நான் பிரார்த்தனையும் செய்து வருகிறேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.