கார் விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் சோகம், நடந்தது இதோ

RIshabh Pant Fans
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இன்று காலை மோசமான கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த வாரம் வங்கதேசத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விளையாடி நாடு திரும்பிய அவர் அடுத்ததாக இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணியில் இடம் பெறவில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சுமாராக செயல்படுவதால் அவர் அதிரடியாக நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இருப்பினும் லேசான காயத்துடன் வங்கதேச தொடரில் விளையாடிய அவர் முழுமையாக குணமடைவதற்காக பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஜனவரி 3 – 15 வரை இருப்பார் என்றும் செய்திகள் வெளியாகின. அந்த நிலையில் 2023 புத்தாண்டுக்காக தனது சொந்த ஊரான டெல்லிக்கு சென்று தன்னுடைய அன்னைக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த அவர் டிசம்பர் 30ஆம் தேதியன்று காலை ஏற்கனவே பயணித்திருந்த டேராடூன் நகரிலிருந்து வீடு திரும்பியதாக தெரிகிறது.

- Advertisement -

ரசிகர்கள் சோகம்:
குறிப்பாக தன்னுடைய பிஎம்டபிள்யூ காரை தாமே இயக்கிக் கொண்டு டெல்லியை நோக்கி சென்று கொண்டிருந்த அவர் என்ஹச் 58 மங்கல்பூர் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது வேகத்தை குறைப்பதற்காக ஒரு முக்கிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் அதாவது டிவைடரை கடக்கும் போது துரதிஷ்டவசமாக அவருடைய கார் அதில் மோதியது. ரூர்க்கீ எனும் ஊரில் நடைபெற்ற அந்த விபத்தில் டிவைடரில் மோதிய வேகத்தில் ரிஷப் பண்ட்டுக்கு நெற்றிப் பகுதியிலும் முதுகுப் பகுதியிலும் கால் பகுதிகளும் கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

அதே சமயம் மோதிய வேகத்தில் திடீரென்று கார் தீப்பிடிக்க துவங்கியதை அந்த வேதனையான தருணத்தில் கவனித்த ரிஷப் பண்ட் சாதுரியமாக செயல்பட்டு கார் ஜன்னல் கதவுகளை திறந்து வெளியேறியுள்ளார். அதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் கார் தீயில் கருகியது. அதை அருகில் இருந்து கவனித்த மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரிஷப் பண்ட் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் நெஞ்சங்கள் உடைந்து ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அத்துடன் வீரேந்திர சேவாக் முதல் விவிஎஸ் லக்ஷ்மன் வரை ஏராளமான நட்சத்திரம் முன்னாள் வீரர்களும் இந்நாள் வீரர்களும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கடவுளை வேண்டி வருகிறார்கள்.

அதே சமயம் அதிர்ஷ்டத்துடன் உயிர் தப்பியுள்ளதால் நிம்மதியடைந்துள்ள ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விரைவில் அவர் குணமடைந்து இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள். ஏனெனில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சிய சாதனைகளை படைத்துள்ள அவர் இந்தியாவின் மேட்ச் வின்னராக போற்றப்படுகிறார்.

இதையும் படிங்கதொடர்ந்து சான்ஸ் பெறுவதற்கு இலங்கை தொடரில் அதை செய்ங்க – சஞ்சு சாம்சனுக்கு சங்கக்காரா சூப்பர் அட்வைஸ்

24 வயதிலேயே நிறைய அபார சாதனைகளை படைத்து காபா போன்ற சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுதலாகும்.

Advertisement