அவங்க மட்டும் கடன் வாங்கி விளையாட வைக்கலைனா இன்னைக்கு இந்தியாவுக்கு விளையாடிருக்க மாட்டேன் – ரிங்கு சிங் நெகிழ்ச்சி பேட்டி

- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் மழை வந்த உதவியுடன் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக கம்பேக் கொடுத்துள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய 2 வீரர்கள் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றனர். அதில் அடிமட்டத்திலிருந்து போராடி வந்த ரிங்கு சிங் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

RInku Singh Indian Team

- Advertisement -

உத்திரபிரதேசத்தில் சாதாரண சிலிண்டர் விநியோகம் செய்யும் நபரின் மகனாக பிறந்து உள்ளூர் போட்டிகளில் மாநில அணிகளுக்காக விளையாடி அசத்திய அவர் கடந்த 2018 முதல் ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் கொல்கத்தா அணியில் கூல்டிரிங்ஸ் தூக்குபவராக பெஞ்சில் அமர்ந்து வந்தார். அப்படியே காலங்கள் உருண்டோடிய நிலையில் கடந்த வருடம் முதல் முறையாக லக்னோவுக்கு எதிராக போராடி வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்ததால் இம்முறை முதல் முறையாக முழுமையான வாய்ப்பு பெற்ற அவர் 14 போட்டிகளில் 474 ரன்களை 149.53 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார்.

ரிங்கு நெகிழ்ச்சி:
அதிலும் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த 5 சிக்சர்கள் அடித்து வரலாறு காணாத வெற்றி பெற வைத்த அவர் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தேர்வுக்குழு கண்டுகொள்ளாத நிலையில் விமர்சனங்கள் எழுந்ததால் இத்தொடரில் தேர்வாகியுள்ள அவர் 2024 டி20 உலகக்கோப்பை போன்ற வருங்கால தொடர்களில் இடது கை பேட்ஸ்மேன் பஞ்சத்தை தீர்த்து ஃபினிஷராக செயல்படுவார் என்று நம்பிக்கை அனைவரிடமும் காணப்படுகிறது.

Rinku-Singh-1

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய சூழ்நிலைகளிலும் தாம் விளையாடுவதற்கு கடன் வாங்கியும் வியர்வை சிந்தி உழைப்பால் கிடைத்த பணத்தையும் வைத்து தேவையான வசதிகளை செய்து கொடுத்த தம்முடைய அம்மா மற்றும் குடும்பத்தினர் தான் இன்று இந்தியாவுக்காக விளையாட முக்கிய காரணமாக இருந்ததாக ரிங்கு சிங் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியதற்கு பின்வருமாறு. “இந்திய அணியில் தற்போது இடம் பிடித்துள்ளது நல்ல உணர்வை கொடுத்துள்ளது. ஏனெனில் இந்த இடத்தை தொடுவதற்கு நான் கடுமையாக உழைத்துள்ளேன்”

- Advertisement -

“குறிப்பாக கடந்த 10 – 12 வருடங்களுக்கு முன்பாகவே நான் கிரிக்கெட்டை விளையாட துவங்கினேன். இருப்பினும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற இலக்கை என்னுடைய பெற்றோர்கள் தான் தீர்மானித்தனர். மேலும் ஐபிஎல் தொடரில் பலர் விளையாடினாலும் சிலர் மட்டுமே நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவதால் அதில் கிடைக்கும் குறைந்த வாய்ப்புகளை அதிகமாக பயன்படுத்தி இந்திய அணிக்காக விளையாட முயற்சி செய் என்று அவர்கள் சொன்னார்கள். தற்போது அவர்களுடைய கனவு நிஜமாகியுள்ளது”

“இந்தியாவுக்காக முதல் முறையாக நான் தேர்வு செய்த தருணத்தில் என்னுடைய நண்பர்களுடன் நொய்டாவில் இருந்தேன். அந்த செய்தி வந்ததும் உடனடியாக நான் போன் செய்த போது என்னுடைய அம்மா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அவருடைய உணர்ச்சிவசமான குரலை கேட்டு நானும் கலங்கிய கண்களை கட்டுப்படுத்த முடியாமல் மகிழ்ச்சியடைந்தேன். என்னை விட இந்த வாய்ப்புக்காக அவர்கள் தான் நீண்ட காலம் காத்திருந்தனர். இந்த வாய்ப்புக்கு பின் நிறைய வியர்வை இருக்கிறது”

இதையும் படிங்க:உங்களோட ஆபத்தே ஐபிஎல் தான், சொந்த மண்ணில் இந்திய அணி 2023 உ.கோ வெல்லுமா? கிரேக் சேப்பல் பதில் இதோ

“நான் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய குடும்பத்தினர் பொருளாதார அளவில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தனர். அதுவே எனக்கு சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது. குறிப்பாக என்னுடைய கேரியருக்கு தேவையான பணம் இல்லாத போது என்னுடைய அம்மா மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கி தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்தார். அப்படி என்னுடைய குடும்பத்தினர் கொடுத்த ஆதரவு காரணமாகவே இன்று நான் இந்திய அணியில் இருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement