ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் கூட சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி உலகக் கோப்பைகளில் சந்தித்து வரும் தலைகுனியும் தோல்விகளை நிறுத்த வேண்டிய நிர்பந்தத்துடன் களமிறங்க உள்ளது. இருப்பினும் இத்தொடர் துவங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 2 முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடையாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதே போல மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாததும் முக்கிய தொடர்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சொதப்புவதில் எந்த மாற்றமும் காணவில்லை என்பது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நிரூபணமானதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆனாலும் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து சிறப்பான கம்பேக் கொடுத்துள்ள தெம்புடன் நிறைகளை குறையாக்கி இத்தொடரில் வெற்றி வாகை சூடுவதற்காக இந்திய அணியினர் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றனர்.
சேப்பல் கருத்து:
மேலும் 2011க்குப்பின் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் சொந்த ரசிகர்கள் தங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருப்பார்கள் என்பதால் அதை பயன்படுத்தி கோப்பையை வெல்வோம் என கேப்டன் ரோகித் சர்மாவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தாம் பயிற்சியாளராக இருந்த காலத்திலும் சரி இப்போதும் சரி வெளிநாடுகளில் சற்று தடுமாறினாலும் சொந்த மண்ணில் இந்தியா அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.
எனவே அதை பயன்படுத்தி இந்த உலகக் கோப்பையில் மிகவும் சுதாரிப்புடன் செயல்பட்டால் நிச்சயம் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே சமயம் கடந்த பல வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவின் நிலவும் கால சூழ்நிலைகளை நன்கு தெரிந்து கொண்டுள்ளதால் அது இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே மிகவும் கவனம் மற்றும் சுதாரித்துடன் செயல்பட்டால் 2011 போல இந்தியா மேஜிக் நிகழ்த்த முடியும் என்று கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“ஐசிசி தொடர்களில் சொந்த மண் சாதகம் நிச்சயமாக பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்தியாவும் இத்தொடரில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அணியாக இருக்கிறது என்று நம்புகிறேன். மேலும் இந்திய அணியின் பயிற்சியாளராக நான் இருந்த போது ஒன்றை கவனித்தேன். அதாவது சொந்த மண்ணில் எதிரணிகள் எந்த மாதிரியான சவால்களை போட்டாலும் அதை சிறப்பாக கையாளும் திறமை இந்தியர்களிடம் இருக்கிறது. அதை நான் இந்திய அணியின் உடைமாற்றும் அறையிலிருந்து நேரடியாக பார்த்துள்ளேன்”
“இப்போதும் அது மாறவில்லை. தற்போது ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலைமையில் இந்திய அணி சிறப்பாகவே இருக்கிறது. எனவே சொந்த மண்ணில் அவர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றே நானும் நினைக்கிறேன். இருப்பினும் இது போன்ற பெரிய தொடர்களை வெல்வது எப்போதுமே கடினமாகும். எனவே நீங்கள் இந்திய ரசிகராக இருந்தால் கவனமாக இருங்கள் என்று நான் சொல்வேன்”
இதையும் படிங்க:எங்க இந்திய ப்ளேயர் என்ன பண்ணனும்னு நீங்க சொல்லாதீங்க, சோயப் அக்தருக்கு – சௌரவ் கங்குலி கொடுத்த பதிலடி என்ன
“அதாவது எச்சரிக்கை மற்றும் நம்பிக்கையுடன் இருங்கள். இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கும் என்றாலும் எதிர்பார்த்த விஷயங்கள் உங்கள் வழியில் நடக்கவில்லை என்றால் நீங்கள் மனமுடைந்து போகலாம். அதே சமயம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் சிறந்த அணிகளை கொண்டுள்ளன. மேலும் அவர்கள் ஐபிஎல் தொடரில் நீண்ட காலமாக விளையாடி வருவதால் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு இருக்கும் பிரகாசமான வெற்றி வாய்ப்பு தற்போது ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.