ஏசியன் கேம்ஸ் 2023 : 15 பந்தில் 37 ரன்கள் வெறித்தனத்தை காட்டிய ரிங்கு சிங் – பினிஷர்னா இவர்தான்

Rinku-Singh
- Advertisement -

இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் கடந்த 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் கொல்கத்தா அணியில் தொடர்ச்சியாக இடம்பிடித்து விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக பறக்கவிட்டு தான் ஒரு சிறந்த பினிஷர் என்பதை உலகிற்கு நிரூபித்தார்.

அதன் பின்னர் அவரது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு காரணமாக டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணிக்காக இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்று உள்ள ரிங்கு சிங்கிற்கு தனது அறிமுக போட்டியில் களமிறங்க வாய்ப்பே கிடைக்காமல் போனது.

- Advertisement -

ஆனால் மற்றொரு போட்டியில் கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 38 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் தற்போது சீன நாட்டிற்கு சென்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கும் அவர் ஏசியன் கேம்ஸ் தொடரின் ஆடவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான காலிறுதி சுற்றில் இன்று நேபாள் அணிக்கு எதிராக விளையாடினார்.

அந்த வகையில் நேபாள் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. இப்படி இந்த போட்டியில் இந்திய அணி 200 ரன்களை கடப்பதற்கு ரிங்கு சிங் செய்த சிறப்பான பினிஷிங்கே காரணம் என்று சொல்லலாம்.

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியில் ஆறாவது வீரராக களமிறங்கிய ரிங்கு சிங் 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 37 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரி என 25 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நேபாள் விளையாடி வருகிறது.

இதையும் படிங்க : ஏசியன் கேம்ஸ் 2023 : 49 பந்தில் 100 ரன்.. சுப்மன் கில்லின் வரலாற்று சாதனையை உடைத்த – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்நிலையில் இந்த போட்டியிலும் அற்புதமான ஃபினிஷிங்கை வெளிப்படுத்திய ரிங்கு சிங்கை பாராட்டி வரும் வேளையில் நிச்சயம் இனி டி20 கிரிக்கெட் இந்திய அணியில் இவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் பினிஷராக இவரால் நீண்ட காலம் ஜொலிக்க முடியும் என்ற கருத்துக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement