உத்திரபிரதேசத்தில் யூபி லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் செப்டம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 20வது லீக் போட்டியில் மீரட் மார்விக்ஸ் மற்றும் கான்பூர் சூப்பர்ஸ்டார்ஸ் அணிகள் மோதின. மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டி தலா 9 ஓவர்களாக நடந்தது.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மீரட் 9 ஓவர்களில் 90-3 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக மாதவ் கவுசிக் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 52* (26) ரன்கள் எடுத்தார். கான்பூர் சார்பில் அதிகபட்சமாக வினித் பன்வர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 91 ரன்களை துரத்திய கான்பூர் அணிக்கு அன்கூர் மாலிக் மற்றும் கேப்டன் சமீர் ரிஸ்வி ஆகியோர் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.
ரிங்கு சிங் மேஜிக்:
அதில் அன்கூர் மாலிக் 33 (13), சமீர் ரிஸ்வி 21 (14) ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக வந்த சோயப் சித்திக் 6 (2) ரன்களில் ரன் அவுட்டானார். அப்போது 5 ஓவரில் கான்பூர் 61-3 ரன்கள் எடுத்ததால் கடைசி 4 ஓவரில் 30 ரன்கள் எடுத்து எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது வித்தியாசமாக தாமே பந்து வீசும் முடிவை மீரட் கேப்டன் ரிங்கு சிங் எடுத்தார்
அந்த வாய்ப்பில் மேஜிக் செய்த அவர் 6வது ஓவரின் 2, 5, 6வது பந்துகளில் ஆதர்ஷ் சிங் 0, ஷவுர்யா சிங் 5, சுதான்ன்சு சொங்கரை 0 ரன்களில் அவுட்டாக்கி திருப்புமுனையை உண்டாக்கினார். அதை பயன்படுத்திய மீரட் பவுலர்கள் அடுத்து வந்த பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்தனர். கடைசியில் ரிஷப் ராஜ்புத் அதிரடியாக 12 (4) ரன்கள் எடுத்தும் 7.4 ஓவரில் கான்பூர் அணியை 83 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய மீரட் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பவுலராக ரிங்கு:
அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரிங்கு சிங் வெறும் 1 ஓவரில் 7 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு கருப்புகுதிரையாக செயல்பட்டார். அதே போல ஜீசன் அன்சாரி 3, யாஷ் கார்க் 2 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் பங்காற்றினர். அந்த வகையில் இப்போட்டியில் ரிங்கு சிங் தனது பந்து வீச்சில் வெற்றியை பெற்றுக் கொடுத்த ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார்.
இதையும் படிங்க: இதுவரை யாருமே செய்யல.. ஜெய் ஷா ஆச்சும் வாயில் பேசாம இதை செய்றாருன்னு பாப்போம்.. மைக்கேல் வாகன்
கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இதே போல இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது 19வது ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்த ரிங்கு சிங் திருப்பு முனையை உண்டாக்கி இந்தியா வெற்றி பெற உதவியினார். அந்த வகையில் தற்போது அவர் பகுதி நேர பவுலராக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.