- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தொடர் துவங்கும் முன்பே ரெடியா இருக்க சொன்னாரு.. 19வது ஓவரை வீச அவர் தான் காரணம்.. ரிங்கு பகிர்ந்த பின்னணி

இலங்கைக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற கடைசி போட்டியில் இலங்கையை சூப்பர் ஓவரில் இந்தியா தோற்கடித்தது மறக்க முடியாததாக அமைந்தது. ஏனெனில் அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 137/9 ரன்கள் எடுத்தது.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இலங்கையும் 20 ஓவரில் 137/8 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 2 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட் எடுத்து இலங்கையை சுருட்டி வீசினார். அதன் பின் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சூரியகுமார் இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

பவுலராக அசத்திய ரிங்கு:
முன்னதாக அந்தப் போட்டியில் இலங்கைக்கு கடைசி 12 பந்துகளில் வெறும் 9 ரன்கள் தேவைப்பட்டதால் இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது வித்தியாசமாக சிந்தித்த கேப்டன் சூர்யகுமார் 19வது ஓவரை ரிங்கு சிங்கிடம் கொடுத்தார். அந்த ஓவரில் வெறும் 2 ரன் மட்டுமே கொடுத்த ரிங்கு சிங் 2 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை கம்பேக் கொடுக்க வைத்தார்.

இறுதியில் 7 ரன்கள் தேவைப்பட்ட போது கேப்டன் சூரியகுமார் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் இத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே பந்து வீச தயாராக இருக்குமாறு கேப்டன் சூர்யகுமார் தம்மிடம் சொன்னதாக ரிங்கு சிங் கூறியுள்ளார். இது பற்றி பிசிசிஐ வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உள்ளூர் கிரிக்கெட்டில் நான் சில விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டிலும் 1 விக்கெட் எடுத்துள்ளேன். அதனால் இந்த தொடரில் பந்து வீச தயாராக இருக்குமாறு சூர்யா என்னிடம் கூறியிருந்தார். இந்தப் போட்டிக்காக நான் ஆரம்பத்தில் பந்து வீச பயிற்சி எடுக்கவில்லை. இருப்பினும் பவுலிங் செய்ய தயாராகுமாறு சூர்யா பாய் என்னிடம் கூறியிருந்தார்”

இதையும் படிங்க: ஹசரங்கா மாதிரி வீரர்களை தடை பண்ணுங்க.. ஐபிஎல் 2025 கூட்டத்தில் காட்டமாக பேசிய காவ்யா மாறன்

“ஆனால் இப்போட்டியில் அதுவும் கடினமான சூழ்நிலையில் அவர் என்னை பந்து வீச அழைப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறினார். அந்த வகையில் முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்த ரிங்கு சிங் எளிதில் சிரிக்காத பயிற்சியாளர் கௌதம் கம்பீரையே சிரிக்க வைத்தது சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து இலங்கையை ஒருநாள் தொடரில் சந்திக்க இந்தியா தயாராகி வருகிறது.

- Advertisement -