
இந்தியாவில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான 19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு லக்னோ மைதானத்தில் நடைபெற்ற முக்கிய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இரு அணிகளுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போட்டி டிராவில் முடிவடைந்தது. பின்னர் சூப்பர் ஓவர் வரை சென்று கொல்கத்தா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்தது. டாப் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக ஆறாவது வீரராக களமிறங்கிய ரிங்கு சிங் இறுதிவரை களத்தில் நின்று 51 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என 83 ரன்களை குவித்து அந்த அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார்.
அவரது சிறப்பான இன்னிங்ஸ் காரணமாக கொல்கத்தா அணி வெற்றி பெற்றதால் அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் அடித்த 83 ரன்களின் மூலம் சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ் தோனியின் 15 ஆண்டுகால சாதனை ஒன்றிணையும் முறியடித்து அசத்தியுள்ளார். அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியின் போது ஆறாவது வீரராக களமிறங்கிய அவர் 83 ரன்களை விளாசியதன் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் ஆறாவது இடத்தில் களமிறங்கி அதிக ரன்களை அடித்த வீரராக அவர் தோனியை பின்னுக்கு தள்ளி தனது பெயரை பதிவு செய்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக மகேந்திர சிங் தோனி ஆறாவது இடத்தில் களமிறங்கி 40 பந்துகளில் 70 ரன்களை குவித்திருந்தார்.
இதையும் படிங்க : சூப்பர் ஓவரில் விளையாட நிக்கோலஸ் பூரானை அனுப்பியது ஏன்? தோல்விக்கு பிறகு – ரிஷப் பண்ட் பதில்
அதுவே இதுவரை சாதனையாக இருந்து வந்த வேளையில் நேற்றைய போட்டியின் மூலம் ரிங்கு சிங் அந்த சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளார். அதோடு இந்த போட்டியில் பேட்டிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் அசத்திய ரிங்கு சிங் 5 கேட்ச்களை பிடித்து பிரமாதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.