ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பஞ்சாப் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது. அதனால் 18 வருடங்களில் பெங்களூரு முதல் முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூருவை சிறப்பாக பவுலிங் செய்த பஞ்சாப் 190 ரன்களுக்கு கட்டுப்படுத்தியதால் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதைத் துரத்திய பஞ்சாப்புக்கு பிரியான்ஸ் ஆர்யா 24, பிரப்சிம்ரன் சிங் 26 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் அவர்களுக்குப் பின் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 1 (2), நேஹல் வதேரா 15 (18) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் மறுபுறம் போராடிய ஜோஸ் இங்லீஷ் 39 (23) ரன்னில் க்ருனால் பாண்டியா சுழலில் சிக்கியது திருப்பு முனையாக அமைந்தது.
தோல்விக்கான காரணம்:
ஏனெனில் அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 6, ஓமர்சாய் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். மறுபுறம் வெறித்தனமாக போராடிய சசாங் சிங் 61* (30) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 184/7 ரன்களை மட்டுமே எடுத்த பஞ்சாப் ஒரு சிக்ஸர் வித்தியாசத்தில் கோப்பையைக் கோட்டை விட்டது. இந்நிலையில் இந்தத் தொடரிலேயே ஃபைனலில் விளையாடிய பிட்ச் பேட்டிங் செய்வதற்கு அற்புதமாக இருந்தது என்று சசாங் சிங் தம்மிடம் சொன்னதாக பஞ்சாப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
அதையும் தாண்டி பஞ்சாப் வெறும் 6 ரன்னில் தோல்வியை சந்தித்ததற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோல்விக்கான சாக்கு என்னிடமும் எங்கள் அணியிடமும் இல்லை. சொல்லப்போனால் போட்டி முடிந்த பின் இந்த வருடம் தாம் பேட்டிங் செய்ததிலேயே ஃபைனல் பிட்ச் சிறந்தது என்று சசாங் என்னிடம் சொன்னார். எனவே பிட்ச் தோல்விக்கு காரணமில்லை”
கம்பேக் கொடுப்போம்:
“உண்மையில் நாங்கள் பவர் பிளேவில் சில ஓவர்களில் வேகத்தை இழந்தோம். 6 – 10 வரையிலான ஓவர்களில் நாங்கள் அதிரடியாக விளையாடாதது தோல்வியைக் கொடுத்தது. அங்கே முக்கிய விக்கெட்டுகளை இழந்த நாங்கள் வேகத்தையும் இழந்தோம். 11, 13வது ஓவரில் க்ருனால் பாண்டியா அபாரமாக பவுலிங் செய்தது வெற்றி எங்களிடமிருந்து நழுவக் காரணமானது”
இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ இந்தியா போல.. மாஸ் காட்ட நினைத்த ஆர்சிபி’க்கு கிடைத்த ஏமாற்றம்.. மாறிய திட்டம் இதோ
“இருப்பினும் வெற்றியை நெருங்கியதற்காக நாங்கள் பெருமையடைகிறோம். இதுவே மற்ற அணிகளாக இருந்திருந்தால் 6க்கு பதில் 30 – 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருப்பார்கள். 6 – 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தோம் என்பதை என்னால் உறுதியாக நம்ப முடியவில்லை. ஐபிஎல் கோப்பை வெல்வது எளிதல்ல. அதை சென்னை, மும்பை போன்ற அணிகள் பலமுறை வென்றுள்ளன. இது மிகவும் கடினமானத் தொடர். இங்கிருந்து 12 மாதங்களில் பஞ்சாப் ஐபிஎல் கோப்பையை வென்று கொண்டாடும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.



