ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் கோப்பையை ரஜத் படிதார் தலைமையில் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சாதனை படைத்துள்ளது. ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. அதனால் காலம் காலமாக சந்தித்து வந்த கிண்டல்களை நிறுத்திய பெங்களூரு 17 வருடங்கள் கழித்து ஒரு வழியாக முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
அந்த சரித்திர வெற்றியை விராட் கோலி மற்றும் ஆர்சிபி வீரர்கள் ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாகக் கொண்டாடினர். குறிப்பாக விராட் கோலி களத்திலேயே அழுது உணர்வுப்பூர்வமாக கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் ஏபி டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் ஆகிய முன்னாள் ஆர்சிபி ஜாம்பவான்களும் கலந்து கொண்டார்கள்.
மாஸ் காட்ட நினைத்த ஆர்சிபி:
முன்னதாக ஆர்சிபி அணி 18 வருடங்கள் கழித்து காத்திருந்து முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதை பெங்களூருவில் தங்களுடைய ரசிகர்களுடன் கொண்டாட ஆர்சிபி அணி நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக திறந்தவெளி பேருந்தில் கோப்பையுடன் பயணித்து ஆர்சிபி ரசிகர்களுடன் வெற்றி கொண்டாடப்படும் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்தது.
கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி மும்பையில் திறந்தவெளி பேருந்தில் வந்து வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது. அப்போது லட்சக்கணக்கில் ஒன்று சேர்ந்த ரசிகர்கள் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடி மாஸ் காட்டினார்கள். அதே போல வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஆர்சிபி ரசிகர்கள் தயாரானார்கள்.
மாறிய திட்டம்:
அதன் படி பெங்களூருவில் உள்ள சௌதா முதல் சின்னசாமி மைதானம் வரை ஆர்சிபி அணியினர் திறந்தவெளி பேருந்தில் செல்ல திட்டமிட்டனர். ஆனால் பெங்களூரு நகரில் சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசல் காணப்படுவது வழக்கமாகும். அப்படிப்பட்ட பெங்களூரு நகரில் ஆர்சிபி அணியினர் திறந்தவெளி பேருந்தில் வந்தால் போக்குவரத்து நெரிசலையும் கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியாது என உள்ளூர் காவல்துறை தெரிவித்து விட்டது.
இதையும் படிங்க: மேட்ச்க்கு முன்னாடி ஏ.பி டிவில்லியர்ஸிடம் இதை சொல்லிட்டு தான் விளையாடவே போனேன் – விராட் கோலி உருக்கம்
அதனால் அந்தப் பயணம் ரத்து செய்யப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அது ஆர்சிபி ரசிகர்களிடம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அதற்கு பதிலாக ஆர்சிபி அணியினர் கர்நாடக முதல்வரை சந்திக்க உள்ளனர். அங்கிருந்து நேராக சின்னசாமி மைதானத்திற்கு செல்ல உள்ளனர். அங்கே மாலை 5 – 7 மணியளவில் ஆர்சிபி அணியினருக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



