கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான மாபெரும் இறுதிப்போட்டியில் அவர்களை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றி ஆர்.சி.பி அணியின் வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆர்.சி.பி ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.
ஏ.பி டிவில்லியர்ஸ் கோப்பையை பகிர தகுதியானவர் : விராட் கோலி
அதிலும் குறிப்பாக கடந்த 18 ஆண்டுகளாக ஆர்.சி.பி அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலி இந்த கோப்பையை கைப்பற்றியது பலரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை ஆண்டு காலமாக ஒரு வெற்றிக்கு போராடி வந்த அவரது கோப்பைக்கான பயணம் நேற்று வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.
குறிப்பாக போட்டியின் கடைசி கட்ட ஓவர்களில் இந்த வெற்றியை நினைத்து விராட் கோலி ஆனந்த கண்ணீர் விட்டதையும் நம்மால் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இந்தப் போட்டி முடிந்து உணர்ச்சிகரமான அந்த தருணம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட விராட் கோலி தனது நண்பரான ஏ.பி டிவில்லர்ஸ் உடன் போட்டிக்கு முன்னதாக என்ன பேசினார் என்பது குறித்தும் தனது கருத்தினை பகிர்ந்திருந்தார்.
அந்தவகையில் அவர் கூறுகையில் : ஏ.பி டிவில்லியர்ஸ் எங்களது அணிக்காக பல ஆண்டுகாலம் உழைத்திருக்கிறார். இந்த போட்டிக்கு முன்னதாக நான் அவரிடம் நிச்சயம் இம்முறை கோப்பையை வெல்வோம். அது நமக்கும் நமது ரசிகர்களுக்கும் சொந்தமானது. உங்களுக்கும் இந்த வெற்றியில் பங்கு உண்டு. நாங்கள் கோப்பையை தூக்கும்போது நீங்களும் எங்களுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு தான் விளையாட வந்தேன்.
ஏபி டிவில்லியர்ஸ்க்கும் ஆர்சிபிக்கும் இடையேயான பிணைப்பு என்பது வார்த்தைகளால் கூற முடியாத ஒன்று. எங்களுடைய நட்பும் சரி, ஆர்சிபி அணிக்காக எங்களுடைய அர்ப்பணிப்பும் சரி அளவிட முடியாதது. ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்று நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்றளவும் அவரே அதிக ஆட்டநாயகன் விருதினை வென்ற வீரராக இருக்கிறார்.
இதையும் படிங்க : 18 வருஷம் வெய்ட் பண்ண வெச்ச நீ ஒர்த் நண்பா.. இந்த கோப்பை அவங்களுக்கானது.. விராட் கோலி பதிவு
அந்த அளவிற்கு அவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளார். நிச்சயம் எங்களுடன் கோப்பையை பகிர்ந்து கொள்ளும் வீரராக இருக்க அவருக்கு தகுதி உண்டு என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.



