
ஐபிஎல் 2026 தொடருக்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் ட்ராவிட் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்காக நிறைய வெற்றிகளில் பங்காற்றிய ஜாம்பவான் வீரர் மற்றும் கேப்டனான டிராவிட் 2011 – 2013 காலகட்டங்களில் ராஜஸ்தான் கேப்டனாக செயல்பட்டார். அதனால் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியாவின் பயிற்சியாளராக வென்ற கையோடு அவர் ராஜஸ்தான் அணியில் இணைந்தார்.
2027 ஐபிஎல் வரை ராகுல் டிராவிட் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த வருடம் சுமாராக விளையாடிய ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்து வெளியேறியது. இருப்பினும் ராகுல் டிராவிட் தம்முடைய காயத்தை தாண்டி வீல்சேரில் வந்து பயிற்சியாளராக செயல்பட்டது பலரது பாராட்டுக்களைப் பெற்றது.
அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு மிகுந்த டிராவிட் தற்போது ஒரே வருடத்துடன் ராஜஸ்தான் அணியிலிருந்து விலகியுள்ளது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. இந்நிலையில் கேப்டன்ஷிப் சம்பந்தமாக அணி ராஜஸ்தான் நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே டிராவிட் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக க்ரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது ராஜஸ்தான் அணி ரியான் பராக்கை கேப்டனாக நியமிக்க விரும்புவதாக தெரிகிறது.
2019 முதல் தடுமாறி வந்த அவர் ஒரு வழியாக கடந்த 2024 சீசனில் 573 ரன்கள் அடித்து சிறப்பாக செயல்பட்டார். மேலும் 2025 சீசனில் சஞ்சு சாம்சன் காயத்தை சந்தித்த போது தற்காலிகமாக அவர் சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட 393 ரன்கள் அடித்தார். அசாம் மாநிலத்தை சேர்ந்த அவருக்கு வடகிழக்கு பகுதியில் கணிசமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
அத்துடன் அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தியில் இருக்கும் பரஸ்பரா மைதானம் ராஜஸ்தான் அணியின் 2வது சொந்த மைதானமாகும். எனவே தங்களுடைய அணியின் வருங்காலம் மற்றும் புதிய பிராண்டை உருவாக்குவதற்காக ராஜஸ்தான் நிர்வாகம் ரியான் பராக்கை கேப்டனாக நியமிக்க விரும்புவதாக தெரிகிறது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ராகுல் டிராவிட் தொடர்ந்து சஞ்சு சாம்சன் கேப்டனாக செயல்பட விரும்புவதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முதல்ல தோனி ஃபோனை எடுக்கிறாரா பாருங்க.. கம்பீருடன் 2026 டி20 உ.கோ பார்ட்னர்ஷிப் நல்லாருக்கும்.. திவாரி பேட்டி
அத்துடன் ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் ஆகிய ராஜஸ்தான் வீரர்களும் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி நிலையான இடத்தைப் பிடித்துள்ளனர். எனவே வருங்காலத்தைக் கருத்தில் கொண்டால் அவர்களில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம் என்று டிராவிட் பரிந்துரைத்ததாக தெரிய வருகிறது. ஆனால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் ரியான் பராக்கை கேப்டனாக்க விரும்புகிறது. அதனாலேயே ஒத்த கருத்துக்கள் இல்லாத இடத்தில் வேலை செய்ய விரும்பாமல் டிராவிட் வெளியேறியுள்ளதாக தெரிவது குறிப்பிடத்தக்கது.