
இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மே 8-ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது தடைபட்டது. இந்தியாவில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை காரணமாக இந்த போட்டி நிறுத்தப்படுவதாகவும் மேலும் ஒரு வாரத்திற்கு ஐபிஎல் தொடர் நடைபெறாது என்றும் பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் பதட்டம் தணிந்த நிலையில் அமைதியான சூழல் நிலவுவதால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளை மே 17-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது.
அந்த வகையில் இன்று நடைபெற இருக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
புள்ளி பட்டியலின் தற்போதைய நிலையில் 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் பிளே ஆப் உறுதி செய்துவிடும் என்பதனால் இந்த போட்டி அவர்களுக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
அதேவேளையில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க மீதமுள்ள 2 போட்டியிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தயில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஆனந்தக் கண்ணீரில் நனைந்த அம்மா, அப்பா.. திறப்பு விழாவில் ரோஹித் நெகிழ்ச்சியுடன் பேசியது என்ன?
இந்நிலையில் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. ஏனெனில் பெங்களூருவில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்று மாலை வரை மழை நீடிக்கும் என்று வானிலை அறிக்கையும் கூறுகின்றது. இதன் காரணமாக இந்த போட்டி தடையின்றி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.