மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மே 16ஆம் தேதி ரோஹித் சர்மா ஸ்டேண்ட் திறக்கும் விழா நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரோஹித் சர்மா இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்துள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியாவின் கேப்டனாக வென்று ரோஹித் சர்மா சாதனை படைத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்து 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ள அவருக்கு வான்கடே மைதானத்தில் மும்பை வாரியம் மிகப்பெரிய கௌரவம் கொடுத்துள்ளது. அந்த ஸ்டேண்ட் திறக்கும் விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் ஐசிசி தலைவர் சரத் பவர் மற்றும் மும்பை வாரிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அத்துடன் ரோஹித் சர்மா தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
ஆனந்தக் கண்ணீர்:
அந்த ஸ்டேண்டை திறப்பதற்காக ரோகித் சர்மா அழைக்கப்பட்டார். அப்போது கீழே இறங்கி சென்ற ரோகித் தம்முடைய பெற்றோர்களை மேடைக்கு வர வைத்து அதைத் திறக்குமாறு மரியாதை செய்கிறார். இறுதியில் முதல்வர் மற்றும் ரோஹித் சர்மாவின் பெற்றோர்கள் ஆகியோர் கோலாகலமாக அந்த ஸ்டேண்டை திறந்து வைத்தார்கள்.
அந்த விழாவில் ரோஹித் சர்மா தம்முடைய அப்பா குருநாத் மற்றும் அம்மா பூர்ணிமாவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆனந்தக் கண்ணீர் விட்டது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. அந்த விழாவில் ரோஹித் சர்மா பேசியது பின்வருமாறு.
ஸ்பெஷல் கெளரவம்:
“என்னுடைய குடும்பம், பெற்றோர்கள், சகோதரர்கள் மனைவி ஆகியோர் இங்கே இருப்பது கூடுதல் சிறப்பாகும். எனக்காக அவர்கள் செய்த அனைத்து தியாகத்திற்கும் நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். இன்று நடந்ததை நான் கனவிலும் நினைத்ததில்லை. கிரிக்கெட்டில் விளையாடும் கனவுடன் வளர்ந்த நான் மும்பை மற்றும் இந்தியாவுக்காக விளையாட விரும்பினேன்”
“அப்படிப்பட்ட என்னுடைய பெயர் ஜாம்பவான்கள் (சச்சின், கவாஸ்கர், அஜித் வடேகர்) பெயர்களுக்கு மத்தியில் இருப்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நான் விளையாடிக் கொண்டிருக்கும் போதே இந்த கௌரவம் கிடைத்தது கூடுதல் ஸ்பெஷலாகும். 2 ஃபார்மெட்டில் ஓய்வு பெற்றாலும் இன்னும் நான் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறேன்”
இதையும் படிங்க: கருண் நாயர், ருதுராஜ் இஸ் பேக்.. இங்கிலாந்து லயன்ஸ் தொடருக்கான இந்தியா ஏ அணி அறிவிப்பு
“எனது பெயரைக் கொண்ட ஸ்டேண்ட்க்கு முன்பே மும்பை அணிக்காக விரைவில் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது நம்ப முடியாததாக இருக்கும். இன்று நடந்ததைக் கனவு காணவில்லை. நீங்கள் நிறைய சாதனைகள் படைக்க முயற்சித்தாலும் இது போன்றவை ஸ்பெஷல். ஏனெனில் வான்கடே ஏராளமான நினைவுகளைக் கொண்ட புகழ்பெற்ற மைதானம். பவார் சார், பட்னாவிஸ் சார் ஆகியோருக்கு ஸ்பெஷல் நன்றி” எனக் கூறினார்.



