
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 3ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் துவங்கியது. அப்போட்டியில் லீக் மற்றும் பிளே ஆஃப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த பில் சால்ட் 16 (9) ரன்னில் அவுட்டானார். மறுபுறம் விராட் கோலி நங்கூரம் கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்புறம் வந்து அதிரடி காட்ட முயற்சித்த மயங் அகர்வால் 24 (18) ரன்னில் சஹால் சுழலில் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த கேப்டன் ரஜத் படிதார் தமது பங்கிற்கு அதிரடியாக விளையாட முயற்சித்து 26 (16) ரன்னில் அவுட்டானார்.
மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி அரை சதத்தை நழுவ விட்டு 43 (35) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்து வெளுத்து வாங்கிய விளையாடிய லியாம் லிவிங்ஸ்டன் 25 (15) ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரைப் போலவே மறுபுறம் மிரட்டலாக விளையாடிய ஜிதேஷ் சர்மா 24 (10) ரன்களை தெறிக்க விட்ட போதிலும் முக்கிய நேரத்தில் விக்கெட்டை இழந்தார்.
அவருடைய விக்கெட்டை எடுத்த விஜய்குமார் 18வது ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து மிரட்டினார். அடுத்ததாக வந்த ரொமாரியா செப்பார்ட் 17 (9) ரன்கள் மட்டுமே விளாசி பெவிலியன் சென்றார். இறுதியில் க்ருனால் பாண்டியாவும் 4 (5) ரன்னில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்யத் தவறினார்.
அதனால் 20 ஓவரில் பெங்களூரு 190/9 ரன்களை மட்டுமே எடுத்தது. குறிப்பாக கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் வெறும் 3 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து ஆர்சிபி அணியை 200 ரன்கள் கூட தொடவிடாமல் மடக்கிப் பிடித்தார். இத்தனைக்கும் முதல் 3 ஓவரில் 37 ரன்களை வாரி வழங்கிய அவர் கடைசி ஓவரில் மேஜிக் செய்து 3 விக்கெட்டுகளை எடுத்தார் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: அஷ்வின் ரிட்டயர்டு ஆனது கரெக்ட் தான்.. ஆனா இவங்க 2 பேரும் ரிட்டயர்டு ஆனது எனக்கு கஷ்டமா இருந்தது – குல்தீப் யாதவ் கருத்து
அவருடன் சேர்ந்து கெய்ல் ஜெமிசன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதைத்தொடர்ந்து 190 ரன்களை கட்டுப்படுத்தி ஆர்சிபி கோப்பையை வெல்ல போராட உள்ளது. அதை முறியடித்து 191 ரன்களை எடுத்து முதல் கோப்பையை முத்தமிட பஞ்சாப் பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.