
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. மே 29ஆம் தேதி முள்ளான்பூரில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் பிடித்த பஞ்சாப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் அந்த அணி 9 வருடங்கள் கழித்து ஐபிஎல் தொடரின் ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
மேலும் 2009, 2011, 2016க்குப்பின் 4வது முறையாக ஐபிஎல் ஃபைனலுக்கு பெங்களூரு அணி தகுதி பெற்றுள்ளது. இந்த வருடம் ரஜத் படிதார் தலைமையில் ஆரம்பம் முதலே அசத்திய பெங்களூரு அணி வெளியூரில் விளையாடிய 7 போட்டிகளிலும் 7 வெற்றிகளை பெற்றது. அதன் வாயிலாக ஒரு ஐபிஎல் தொடரில் 7 வெளியூர் போட்டிகளிலும் வென்ற முதல் அணி என்ற அரிதான சாதனையை பெங்களூரு படைத்தது.
மேலும் குவாலிபயர் 1 போட்டியில் வலுவான பஞ்சாப்பை மிரட்டலாக பௌலிங் செய்த பெங்களூரு அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு சுருட்டி வீசியது. பின்னர் பஞ்சாப்பை அடித்து நொறுக்கிய பெங்களூரு 10 ஓவரில் 106/2 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அப்போட்டியில் 60 பந்துகளை மீதம் வைத்து பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு பிளே ஆஃப் போட்டியில் அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற அபார சாதனையையும் ஆர்சிபி அணி படைத்துள்ளது. இதற்கு முன் 2024 ஐபிஎல் ஃபைனலில் ஹைதராபாத்துக்கு எதிராக கொல்கத்தா 57 பந்துகளை மீதம் வைத்து வென்றதே முந்தைய சாதனை. அந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய சூயஸ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஏற்கனவே இந்த வருடம் ரஜத் படிதார், க்ருனால் பாண்டியா, டிம் டேவிட், பில் சால்ட், விராட் கோலி ஆகியோர் ஆர்சிபி அணிக்காக ஆட்டநாயகன் விருதை வென்றனர். அத்துடன் ஜோஸ் ஹேசல்வுட், ரொமாரியா செபார்ட், ஜிதேஷ் சர்மா ஆகியோரைத் தொடர்ந்து தற்போது சூயஸ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். அப்படி மொத்தமாக இந்த வருடம் 9வது ஆர்சிபி வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர்.
இதையும் படிங்க: வெ.இ அணியை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வெல்ல.. விராட் கோலி அட்வைஸ் தான் காரணம்.. ஜேக்கப் பேட்டி
அந்த வகையில் ஆர்சிபி அணியில் 11 வீரர்களில் கிட்டத்தட்ட 11 பேரும் மேட்ச் வின்னர்களாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அதனால் இம்முறை இறுதிப்போட்டியில் எதிரணியாக யார் வந்தாலும் அவர்களை சிதறடித்து முதல் கோப்பையை வெல்ல ஆர்சிபி அணி தயாராக இருக்கிறது என்றால் மிகையாகாது. அந்த அணியின் சரித்திர வெற்றிக்காக ஆர்சிபி ரசிகர்கள் இப்போது முதலே சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர்.