
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இம்முறை புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரஜத் படிதார் தலைமையில் பெங்களூரு களமிறங்கியுள்ளது. அவருடைய தலைமையில் முதல் போட்டியிலேயே கொல்கத்தாவை அதனுடைய சொந்த ஊரில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தோற்கடித்த பெங்களூரு அணி தொடரை வெற்றிகரமாக துவங்கியது.
அடுத்ததாக பரம எதிரி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது. குறிப்பாக சிஎஸ்கே அணியை அதனுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் 17 வருடங்கள் கழித்து பெங்களூரு தோற்கடித்தது. அதற்கடுத்ததாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்தது.
ஆனால் நேற்று மும்பைக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது. அதன் வாயிலாக மும்பையை அதனுடைய சொந்த ஊரில் இருக்கும் வான்கடே மைதானத்தில் 10 வருடங்கள் கழித்து பெங்களூரு அணி தோற்கடித்தது. ஐபிஎல் தொடரில் சென்னை 5, மும்பை 5, கொல்கத்தா 3 கோப்பைகளை வென்று வரலாற்றின் டாப் 3 வெற்றிகரமான அணிகளாக ஜொலித்து வருகின்றன.
அப்படிப்பட்ட அந்த அணிகளை இந்த வருடம் அதனுடைய சொந்த மண்ணிலேயே பெங்களூரு சாய்த்துள்ளது. அதாவது சிஎஸ்கே அணியை சேப்பாக்கத்திலும் மும்பையை வான்கடே மைதானத்திலும் கொல்கத்தாவை ஈடன் கார்டன்ஸ் மைதானத்திலும் பெங்களூரு தோற்கடித்துள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஒரே வருடத்தில் மும்பை, சென்னை, கொல்கத்தா அணிகளை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த 2வது அணி என்ற சாதனையை பெங்களூரு படைத்துள்ளது.
இதற்கு முன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் எனப்படும் பஞ்சாப் கிங்ஸ் அணி 2012ஆம் ஆண்டு இதே போன்ற வெற்றிகளை பெற்றுள்ளது. சொல்லப்போனால் 2012ஆம் ஆண்டு கொல்கத்தாவை ஆடம் கில்கிரிஸ்ட் தலைமையில் அதன் சொந்த மண்ணில் பஞ்சாப் தோற்கடித்தது. சென்னை மற்றும் மும்பையை அதன் சொந்த மண்ணில் டேவிட் ஹசி தலைமையில் பஞ்சாப் வீழ்த்தியிருந்தது.
இதையும் படிங்க: பவுலர்ஸ் மேல தப்பே இல்ல.. இங்க இப்படித்தான் நடக்கும்.. ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – ஹார்டிக் பேட்டி
ஆனால் இம்முறை ரஜத் படிதார் எனும் ஒரே கேப்டன் தலைமையில் அந்த 3 அணிகளையும் அதன் சொந்த மண்ணில் பெங்களூரு தோற்கடித்துள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஒரே வருடத்தில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய 3 அணிகளையும் அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை ரஜத் படிதார் படைத்துள்ளார். அப்படி டாப் 3 அணிகளையும் அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்துள்ளதால் 2025 ஐபிஎல் கோப்பையை தங்களது பெயரில் எழுதுங்கள் என்று ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் அமைந்துள்ளனர்.