இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா கடந்த பல ஆண்டுகளாகவே மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் ஜடேஜா மிடில் ஆர்டரில் இறங்கி பேட்டிங்கில் கை கொடுப்பதோடு மட்டுமின்றி பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான ரவீந்திர ஜடேஜா இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதம் மற்றும் 20 அரைசதம் என 2893 ரன்களை குவித்துள்ளார். அதோடு 280 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரிலும் பங்கேற்று இருந்த அவர் முதல் போட்டியில் விளையாடிய பிறகு இரண்டாவது போட்டியின் போது காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறினார்.
அதனை தொடர்ந்து இருந்த 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் தனது பிட்னஸை முன்னேற்றிய ஜடேஜா தற்போது எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற இருக்கும் மூன்றாவது போட்டியில் அவர் விளையாட வேண்டும் என்றால் ஒரு நிபந்தனை உள்ளதாம்.
அதாவது ஜடேஜா இந்திய அணிக்காக பேட்டிங், பவுலிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். இப்படி மூன்று துறைகளிலும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய அவரை அவசரப்பட்டு அணியில் விளையாட வைக்காமல் முழு உடற்தகுதியுடன் 5 நாட்களும் விளையாடும் அளவிற்கு பிட்டாக இருந்தால் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று நிர்வாகம் நிபந்தனை தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பல வருஷம் ஒன்னா விளையாடிருக்கோம்.. எங்க ஊர்ல தான் நடக்கணும்ன்னு விதி.. அஸ்வின் பற்றி ஜடேஜா பேட்டி
இதன் காரணமாக ஜடேஜாவின் சொந்த ஊரான ராஜ்கோட் மைதானத்தில் அவர் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தாலும் அவரின் உடற்பகுதியின் அடிப்படையிலே நாளைய பிளேயிங் லெவனில் அவர் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்பது தெரிய வரும்.