
வரும் அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக தீவிரமாக தயாராகி வரும் இந்தியா அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 27இல் துவங்கும் ஆசிய கோப்பை டி20 தொடரில் களமிறங்குகிறது. இதுவரை நடைபெற்ற டி20 தொடர்களை காட்டிலும் இந்த தொடரிலிருந்து தான் டி20 உலக கோப்பையில் விளையாடப்போகும் இறுதிக்கட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே விமர்சனத்தை சந்தித்துள்ள விராட் கோலி, தினேஷ் கார்த்திக் போன்ற முக்கிய வீரர்களுக்கு இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதே போன்றதொரு நிலைமையில் தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் உள்ளார். ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய இவர் கடந்த 2019 உலக கோப்பைக்குப்பின் பேட்டிங்கில் பெரிய அளவில் எழுச்சியை கண்டு 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் நம்பர் ஒன் சுழல்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக அசத்தலாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் கடந்த சில வருடங்களாக தோனி பாரமின்றி தவித்த போது அவரது இடத்தில் களமிறங்கிய இவர் கணிசமான போட்டிகளை வெற்றிகரமாக பினிசிங் செய்து காட்டினார்.
போட்டிக்கு அக்சர்:
இருப்பினும் 2022 சீசனில் பார்மை இழந்த அவர் அதன்பின் நடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் காயத்தால் பெஞ்சில் அமர்ந்திருந்தார். ஆனால் அந்த சமயத்தில் அக்சர் பட்டேல் பேட்டிங்கில் அதிரடியாகவும் பந்துவீச்சில் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை எடுப்பவராகவும் அசத்தலாகவும் செயல்பட்டார். ஆனாலும் அவர் இந்த ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்படாதது நிறைய முன்னாள் வீரர்களை அதிருப்தியடைய வைத்தது.
இருப்பினும் அவரை விட பேட்டிங் மற்றும் பீல்டிங் துறையில் தரமான வீரராக இருப்பதால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜடேஜா இந்த தொடரில் அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. மேலும் என்னதான் பேட்டிங், பீல்டிங் துறையில் அசத்தினாலும் பந்துவீச்சு துறையில் விக்கெட்டுகள் எடுக்கும் தடுமாறும் அவர் நிறைய போட்டிகளில் ரன்களையும் வாரி வழங்குகிறார்.
பொய் சொல்லாது:
அதன் காரணமாக டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சஹாலுக்கு அடுத்தபடியாக 2வது சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்படுபவராக கருதப்படும் ரவீந்திர ஜடேஜா உண்மையாகவே அதற்கு தகுதியற்றவர் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஜடேஜா தரமான வீரர் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவிக்கும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுக்களை எடுக்கும் பவுலராக அவர் இருப்பதில்லை என்பதே நிதர்சனம் என்று புள்ளி விவரத்துடன் பேசியது பின்வருமாறு.
“சஹாலுக்கு பின் சுழல் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா இருப்பது சுவாரசியமானது. ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் அவர் நிச்சயமாக விளையாடுவார் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் உங்களுக்கு அதிக விக்கெட்டுகளை எடுத்து கொடுக்க மாட்டார் என்பதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். ஏனெனில் கண்ணாடி எப்போதும் பொய் சொல்லாது. கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் அவர் விளையாடிய 7 போட்டிகளை பார்த்தால் அதில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டும் 43+ என்ற சராசரியிலும் கிட்டதட்ட 8.5 என்ற எக்கனாமியிலும் எடுத்துள்ளார். இது அந்தளவுக்கு சிறப்பானது கிடையாது”
“அவர் விளையாடிய சர்வதேச டி20 போட்டிகளில் அவரிடம் விக்கெட் எடுக்கும் திறமைகள் இருப்பதாக இது காட்டவில்லை அல்லது அவர் விக்கெட் எடுக்கவில்லை. ஐபிஎல் தொடரிலும் அதே கதைதான். கடந்த ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 5 விக்கெட்டுகளை கிட்டத்தட்ட 50 என்ற சராசரியிலும் 7.50 என்ற எக்கனாமியிலும் 40 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் தான் எடுத்துள்ளார். இருப்பினும் ரவீந்திர ஜடேஜா என்பவர் பேட்டிங், பீல்டிங் ஆகிய துறைகளில் அசத்தக்கூடியவர் என்பதால் விளையாடும் 11 பேர் அணியில் இடம் பெறலாம். ஆனால் அவர் உங்களுடைய விக்கெட் டேக்கர் கிடையாது”
“எனவே திடீரென்று அவர் விக்கெட்டுகளை எடுக்கத் தொடங்குவார் என்று எதிர்பார்க்க வேண்டாம். இந்த 2 தொடர்கள் நடைபெறும் கால சூழ்நிலைகளும் அவரின் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு அமையப் போவதில்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க: தோனியை ரிட்டையராக சொல்லுங்க, சிஎஸ்கே அணியின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ – முழுவிவரம் இதோ
ஆஸ்திரேலியாவில் பெரும்பாலும் சுழல் பந்துவீச்சு எடுபடாது என்ற நிலைமையில் பேட்டிங் மற்றும் பீல்டிங் ஆகியவற்றுக்காக ஜடேஜாவை தேர்வு செய்யலாம் ஆனால் விக்கெட்டுக்களை எடுத்துக் கொடுப்பார் என்ற நோக்கத்தில் அவரை தேர்வு செய்வதில் எந்த பயனும் கிடையாது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.