இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் நகரில் பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 326/5 ரன்கள் குவித்து இப்போட்டியில் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது.
ஏனெனில் ஜெய்ஸ்வால் 10, கில் 0, படிடார் 5 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 33/3 என்ற சுமாரான தூக்கத்தைப் பெற்று தடுமாறிய இந்தியாவை ரோகித் சர்மா இத்தொடரில் முதல் முறையாக தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து 131 ரன்கள் விளாசி மீட்டெடுத்தார். அதே போல மிடில் ஆர்டரில் அறிமுக போட்டியில் அசத்திய சர்பராஸ் கான் அரை சதமடித்து 62 ரன்கள் விளாசினார்.
ஜடேஜா வருத்தம்:
அவர்களுடன் சேர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா தன்னுடைய சொந்த ஊரில் இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து சதமடித்து 110* ரன்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். முன்னதாக 33/3 என இந்தியா தடுமாறிய போது கேப்டன் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து 204 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா அடுத்ததாக வந்த சர்பராஸ் கானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார்.
அவருடன் சேர்ந்து அறிமுகப் போட்டியில் 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்து மொத்தம் 62 ரன்கள் குவித்து நன்கு செட்டிலான சர்பராஸ் கான் விளையாடிய விதத்திற்கு கண்டிப்பாக சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்புறம் 99 ரன்களில் இருந்த ரவீந்திர ஜடேஜா ஒரு பந்தை அருகிலேயே அடித்து 100வது ரன்னை தொடுவதற்காக சிங்கிள் எடுக்க வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே வந்தார்.
அதற்கு சர்பராஸ் கானும் எதிர்ப்புறமிருந்து சிங்கிள் எடுக்க ஓடினார். அப்போது இங்கிலாந்து ஃபீல்டர்கள் பந்தை எடுப்பதை பார்த்த ஜடேஜா மீண்டும் வெள்ளைக் கோட்டுக்குள் சென்றார். ஆனால் அவரை நம்பி வெளியே வந்த சர்பராஸ் கான் மீண்டும் வெள்ளைக்கோட்டை தொடுவதற்குள் இங்கிலாந்து அணியினர் ரன் அவுட் செய்தனர். அந்த வகையில் சதமடிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் செயல்பட்ட ஜடேஜா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சர்பராஸ் கானை அவுட்டாக்கியதாக ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 7 ஆண்டுகால காத்திருப்பு.. ஒருவழியா கிடைத்த அறிமுக வாய்ப்பில் முதல்தர கிரிக்கெட்டிற்கு இணையான சம்பவம் செய்த சர்பராஸ்
இந்நிலையில் சர்பராஸ் கான் அவுட்டாக தான் காரணம் என்று ரவீந்திர ஜடேஜா இன்ஸ்டாகிராமில் வருத்தத்தை தெரிவித்துள்ளது பின்வருமாறு. “சர்பராஸ் கானுக்காக வருந்துகிறேன். அது என்னுடைய தவறான அழைப்பாகும். அவர் மிகவும் நன்றாக விளையாடினார்” என்று கூறியுள்ளார். இருப்பினும் கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம் என்று தெரிவித்த சர்பராஸ் கான் அறிமுகப் போட்டியில் தாம் சிறப்பாக விளையாடுவதற்கு ஜடேஜா உதவியதாக போட்டியின் முடிவில் கூறியது குறிப்பிடத்தக்கது.