
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் இழந்தது. சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த ஒருநாள் தொடரினை இந்திய அணி தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு முன்னணி வீரர்கள் பலர் இருந்த இந்திய அணி அனுபவ வீரர்கள் இல்லாத நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்வி பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் மீது சில விமர்சனங்களும் இருந்து வருகிறது. குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பொறுத்தவரை சில வீரர்கள் சிறப்பாக ஆடியிருந்தாலும் நட்சத்திர வீரர்கள் சிலர் சொதப்பியது பெருமளவு பேசப்படும் பொருளாக மாறியுள்ளது.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் அனுபவ ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்த தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதன் காரணமாக இந்த நியூசிலாந்து தொடரே அவருக்கு கடைசி ஒருநாள் தொடர் என்ற ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த நியூசிலாந்து தொடரே அவருக்கு கடைசி தொடராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா கடந்த பல மாதங்களாகவே சிறப்பாக செயல்படவில்லை என புள்ளி விவரங்கள் காட்டுகிறது. கடைசியாக அவர் விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் 48 ஓவர்களை வீசியிருந்தாலும் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அதுமட்டும் இன்றி பேட்டிங்கிலும் அவர் 99 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதேபோன்று பினிஷர் ரோலில் களமிறங்கும் அவர் போட்டியையும் முடித்துக் கொடுப்பதில்லை. இதன் காரணமாக இனி ஜடேஜாவிற்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காது என்றும் அந்த இடத்தை அக்சர் பட்டேல் பிடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்தவொரு விடயம் போதும்.. ஹார்டிக் பாண்டியாவுக்கு மாற்றுவீரர் நிதீஷ் ரெட்டி தான் – இர்பான் பதான் கருத்து
ஏனெனில் அக்சர் பட்டேலை பொறுத்தவரை நான்காவது இடத்தில் கூட இந்திய அணி பயன்படுத்தியுள்ளது. அந்த இடத்திலும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்வார். அதேபோன்று பந்து வீச்சிலும் முழு 10 ஓவர்களை வீசுவார் என்பதனால் விரைவில் ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓரம் கட்டப்பட்டு அவரது இடத்தை நிரந்தரமாக அக்சர் பட்டேல் பிடிப்பார் என்றும் கூறப்படுகிறது.