அவரை விட சிறந்தவர்னு நிரூபித்தால் தான் டி20 உ.கோ இடம் கிடைக்கும் – ஜடேஜாவை எச்சரிக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர்

sanjay 1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த டி20 தொடரில் பங்கேற்று வந்த இந்தியா அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 27இல் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கும் ஆசிய கோப்பையில் களமிறங்குகிறது. அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இம்முறை 20 போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரில் தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்காக ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருடன் சூரியகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங் போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Ravindra Jadeja IND vs ENg

- Advertisement -

இந்த அணியில் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது நிறைய முன்னாள் வீரர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. அதேசமயம் முகமது சமி மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்படாதது நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான அக்சர் பட்டேல் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அதிரடியாக ரன்களை சேர்த்து நல்ல பார்மில் இருக்கும் போதிலும் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் கூட இடம்பெறாதது பலரையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.

ஜடேஜாவுக்கு அழுத்தம்:
மறுபுறம் அவரது இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2022 தொடரில் சென்னை அணிக்காக பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சுமாராக செயல்பட்டு காயத்தால் வெளியேறிய நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து பார்முக்கு திரும்பினார். அதன்பின் நடந்த இங்கிலாந்து டி20 தொடரின் ஒரு போட்டியில் அசத்திய அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் காயத்தால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இருப்பினும் கடந்த 2019 உலக கோப்பைக்கு பின் பேட்டிங்கில் பெரிய அளவில் முன்னேறியுள்ள அவர் சமீப காலங்களில் இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவிக்கும் திறமையை வெளிப்படுத்தி நம்பர் ஒன் சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக நிரூபித்த காரணத்தாலேயே இந்த ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Axar Patel IND vs WI

ஆனாலும் பேட்டிங்கில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ள அவர் பந்துவீச்சில் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை எடுக்கும் பவுலராக செயல்பட தவறுவதுடன் சில சமயங்களில் ரன்களையும் வாரி வழங்குவதே அவரின் இடத்தை பற்றி கேள்விகளை எழுப்ப வைக்கிறது. ஏனெனில் தற்சமயத்தில் ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் சிறந்த சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக நல்ல பார்மில் இருக்கிறார்.

- Advertisement -

மஞ்ரேக்கர் எச்சரிக்கை:
இந்நிலையில் போட்டிக்கு அக்சர் பட்டேல் வந்துள்ளதால் டி20 உலக கோப்பையில் இடம் பெறுவதற்கு இந்த ஆசிய கோப்பையில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட்டே தீர வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எச்சரித்துள்ளார். மேலும் சமீபத்திய ஐபிஎல் தொடரில் கேரியரில் முதல் முறையாக அரைசதம் அடித்த ரவிச்சந்திரன் அஷ்வினும் சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக போட்டிக்கு இருப்பதால் இந்த ஆசிய கோப்பை ஜடேஜாவுக்கு முக்கியமான தொடர் என்று கூறியுள்ளார். ஒருவேளை இதில் சிறப்பாக செயல்படத் தவறினால் ஆசிய கோப்பையில் இடம்பெறாத அக்சர் பட்டேல் டி20 உலக கோப்பையில் அவரது இடத்தை பிடிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

Sanjay

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தமக்கு தீவிரமான போட்டிகள் வந்துள்ளதை ரவீந்திர ஜடேஜாவும் அறிவார். எனவே இது ஜடேஜா தன்னை ஒரு பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருப்பாரா அல்லது பேட்டிங் ஆல்-ரவுண்டராக இருக்கப் போகிறாரா என்று தேர்வுக்குழுவை நம்ப வைக்கும் தருணமாகும். அதைப் பொறுத்துதான் அணியில் அவரது இடம் முடிவு செய்யப்படும். ஒருவேளை அவர் பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக போட்டிப் போட்டால் அணி நிர்வாகம் அக்சர் படேலை 2வது தேர்வாக யோசிக்க வைக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு காட்ட வேண்டும்”

- Advertisement -

“ஐபிஎல் போன்ற தொடர்களில் அக்ஷர் பட்டேல் முதல் 6 ஓவர்களிலும் பந்து வீசக்கூடியவர். ஆனால் ரவீந்திர ஜடேஜா குறிப்பிட்ட ஓவர்களில் மட்டுமே பந்து வீசக்கூடியவராக இருக்கிறார். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோரிடையே சற்று வித்தியாசம் உள்ளது. எனவே இவர்களது விஷயத்தில் பேட்டிங் ஆல்-ரவுண்டர் தேவையா அல்லது பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தேவையா என்ற முடிவை அணி நிர்வாகம் எடுக்க வேண்டியுள்ளது”

இதையும் படிங்க : IND vs ZIM : அவர எவ்ளோதான் அவமானப்படுத்துவீங்க – சீனியர் வீரரை மதிக்காத பிசிசிஐயை விளாசும் ரசிகர்கள்

“இருப்பினும் முழு பந்து வீச்சாளராக ஜடேஜாவை விட அஷ்வின் மற்றும் அக்சர் பட்டேல் வலுவான உரிமையைப் பெற்றுள்ளனர்” என்று கூறினார். வரலாற்றில் இதுபோல் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்த தருணங்களில் அற்புதமாக செயல்பட்டு அவருக்கு பதிலடி கொடுத்துள்ள ரவீந்திர ஜடேஜா இந்த ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் அவருக்கு பதிலடி கொடுப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement